சென்னை

மைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து பணியாற்றத் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் 13 இரவு கைது செய்தது. நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வரும் 28-ந்தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகிய துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு அளிக்கப்பட உத்தேசிக்கப்பட்டது.  அதன்படி மின்துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடமும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது என்றும் முடிவெடுத்து ஆளுநருக்குத் தமிழக அரசு பரிந்துரைத்தது. அந்த பரிந்துரையில் செந்தில் பாலாஜி என்ன காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டார்? என்ற விவரம் இல்லாததால் அதைக் குறிப்பிடும்படி அரசுக்கு அதை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். இதனால் அமைச்சர்களின் இலாகா மாற்றமும் ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுநர் கேட்ட விளக்கத்துக்கு என்ன மாதிரியான பதில் தெரிவிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய விளக்கங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் க டிதம் அனுப்பினார்.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துசாமிக்கான இலாகா மாற்றத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அவர் அமைச்சராகத் தொடர முடியாது எனக்கூறி முதல்வரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார்..