சென்னை
அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பார்க்க தம்மை அனுமதிக்கவில்லை என அமைச்சரின் வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ கூறி உள்ளார்.
நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவர் சகோதரர் அசோக் வீட்டில் நடந்த சோதனையின் அடிப்படையில் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். வழியில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் அவர் தற்போது ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அமைச்சரின் வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ,
“அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பார்க்க அனுமதிக்கவில்லை. அவரை காரணம் எதுவும் சொல்லாமல் அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அதிகாரிகள் அவரது உறவினர்கள், நண்பர்கள் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.
அமைச்சர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து அதிகாரிகள் ஏதும் தெரிவிக்கவில்லை. அவர் மீது கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
அதிகாரிகள் எந்த வழக்குக்காக அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்”
என்று கூறி உள்ளார்.