இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) கொரோனா கட்டுப்பாடுகளை அடுத்து ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணி (work from home) செய்ய அனுமதித்தது.
இந்த கட்டுப்பாடுகள் நீங்கியதும் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய அழைத்த முதல் நிறுவனமான டிசிஎஸ் இதனை கண்டிப்புடன் செயல்படுத்தி வந்தது.
வாரத்திற்கு மூன்று நாட்கள் என ஒரு மாதத்தில் மொத்தம் 12 நாட்கள் அலுவலகம் வந்து வேலை செய்ய தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியது.
ஆனால், அலுவலகம் வந்து வேலை செய்வதில் பலரும் ஆர்வம் காட்டாமல் வீட்டிலிருந்தே வேலை செய்து வருவதை அடுத்து கடந்த இரண்டாண்டுகளில் டிசிஎஸ் நிறுவனத்தில் புதிதாக பணிக்கு சேர்ந்த ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் வேலை கலாச்சாரம் குறித்து அறிந்திருக்கவில்லை.
இதனால் புதிதாக சேர்ந்த ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்ய ஆர்வம் காட்டுவதை அடுத்து இனி மாதத்தில் 12 நாட்கள் அலுவலகம் வராத ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் மற்றும் விடுப்பு நாட்களை குறைக்கப்போவதாக அந்நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
மருத்துவ அவசரத் தேவைகளைத் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ள அந்நிறுவனம் இந்த புதிய நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.