தருமபுரி
தருமபுரியில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் 7000 டன் நெல் மூட்டைகள் காணவில்லை என்பதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை பகுதியில், மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு வளாகம் அருகே வெத்தலைக்காரன் பள்ளம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் கிடங்கு அமைந்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் இங்கு இருப்பு வைக்கப்படும் நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு வழங்கி அரிசியாக்கி நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருப்பு வைப்பது வழக்கமாகும்.
இவ்வாறு அரைக்கப்படும் அரிசி, ரேஷன் கடைகள், அரசுப் பள்ளி, கல்லூரி விடுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு விநியோகம் செய்யப்படும். இக்கிடங்கில் இருந்து நெல் பெற்று அரிசியாக்கித் தரும் பணியில் தருமபுரி மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கி வருகின்றன.
நெல் கிடங்குக்கு அவ்வப்போது தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நெல் அனுப்பி வைக்கப்படும்.
அண்மையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 22 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு இந்த கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டன. இந்த நெல் மூட்டைகளில் 7,000 டன் நெல் மூட்டைகள் காணாமல் போனதாகச் சென்னையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கண்காணிப்புப் பிரிவுக்குப் புகார் சென்றுள்ளது.
எனவே கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் குழுவினர் கடந்த 2 நாட்களாகத் தருமபுரியில் திறந்தவெளி நெல் கிடங்கு மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நெல் கிடங்கில் இருந்து அரவைக்காக நெல் மூட்டைகளைப் பெற்றுச் செல்லும் ஆலைகள் தரப்பையும் தணிக்கை செய்ய கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் குழுவினர் தயாராகி வருவதாகத் தெரிய வந்துள்ளது.