டெல்லியில் வரும் ஞாயிறன்று திறக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

1947 ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த போது அன்றைய கவர்னர் ஜெனரல் லார்ட் மவுண்ட்பேட்டனிடம் கொடுத்துப் பெறப்பட்ட சோழர் சின்னம் பொறிக்கப்பட்ட செங்கோலை இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு-விடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன தலைமை மடாதிபதி வழங்கினார்.

நேரு-வின் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த செங்கோல் அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இந்த நிலையில், இப்போது புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே இந்த செங்கோலை வைக்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய தினமலர் நாளிதழ் நிருபர், “நீதி தவறாமல் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப ஆட்சி செய்த சோழ மன்னர்கள் வைத்திருந்த செங்கோலை பாஜக ஆட்சியாளர்கள் கையிலெடுத்திருப்பது சரியா ?

அதுவும் கர்நாடக தேர்தலுக்குப் பின் தென்னிந்தியாவில் பாஜக-வுக்கு கதவு சாத்தப்பட்ட நிலையில் இது ,முறையா?” என்ற ரீதியில் கேள்வி எழுப்பினார்.

அவரது கேள்வியை முழுமையாக முடிப்பதற்குள் பாதியில் குறுக்கிட்ட அமித் ஷா “நீங்கள் கேட்க வருவது எனக்கு புரிகிறது, உங்கள் நேரம் முடிந்தது” என்று கூறிவிட்டு அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் வேறு கேள்விக்குத் தாவினார் அமித் ஷா.

அமித் ஷா-வின் இந்த செய்கை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.