முன்னதாகவே தலைப்பை, வாட்ஸ் அப்பில் அனுப்பிய நியூஸ்பாண்ட், அடுத்த நிமிடம் நம் முன் தோன்றினார்.
“ என்ன… தலைப்பைப் படித்ததும் சிரிப்பதா, அழுவதா, அதிர்ச்சி அடைவதா என்று புரியாமல் குழம்புகிறீரோ..” என்றார் சிரித்தபடியே. .
ஆமாம் என்பதாக நாம் தலையாட்ட, நியூஸ்பாண்ட் தொடர்ந்தார்:
“அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஐவர் அணி மீது இருக்கும் ஆத்திரம் குறையவே இல்லை. தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுவை ஜெயலலிதா நியமித்தார். இதில் ஓபிஎஸ் , வைத்தியலிங்கம், எடப்பாடி, நத்தம் , தோப்பு, பழனியப்பன் , பண்ருட்டி , செம்மலை, விஜயபாஸ்கர், பொன்னையன் உள்ளிட்ட 12 பேரை அறிவித்தார்.
ஆனால் நேற்று இறுதி படுத்தப்பட்ட தேர்தல் அறிக்கை ஆய்வு குழு கூட்டத்திற்கு,ஓ.பி.எஸ். உள்ளிட்ட ஐவர் அணிக்கு அழைப்பு இல்லை. மீதமுள்ள ஏழுபேர் மட்டுமே அழைக்கப்பட்டனர்!”
“ஓ…!”
“இந்த ஐந்து பேரின் நடவடிக்கைகள், கடந்த காலத்தில் இவர்களது பரிவர்த்தனைகள் அனைத்தையும் துப்பறிந்து தனக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஒருவருக்கு உத்தரவிட்டிருக்கிறார்!”
“யார் அவர்?” என்று ஆர்வத்தோடு கேட்டோம்.
“காவல்துறையில் முக்கிய பதவியில் இருந்தவர். வீரத்துக்கு பெயர் போன மேற்கத்திய நாட்டு வீரரின் பெயர் கொண்டவர்!”
“ஓ.. முன்னாள் டிஜிபி அலெக்சாண்டரா..?
“‘ஒரு ட்விஸ்ட் வைக்கலாம் என்றால் விடமாட்டீரே” என்று செல்ல கோபத்தை வெளிப்படுத்திய நியூஸ்பாண்ட், தொடர்ந்தார்: “ஐவர் பற்றிய ரிப்போர்ட் கிடைத்த பிறகு, நடவடிக்கை இருக்குமாம். அதாவது ரெய்ட் நடக்கவும் வாய்ப்பு இருக்கிறதாம்!”
“அட… நடக்கட்டும்.. நடக்கட்டும்!”
“உமக்கென்ன… கஷ்டப்பட்டு சேர்த்ததை இழக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் அவர்கள். ஆகவே ஓ.பி.எஸ். தலைமையில் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கடை.. ஸாரி, தனி கட்சி ஆரம்பிக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறார்களாம்!”
“அட.. அம்மா மீது அத்தனை விசுவாசமாக இருந்தார்களே.. அம்மா சிறைக்கு போனதும் முதல்வராக பதவி ஏற்றபோதுகூட சின்னபிள்ளை மாதிரி தேம்பித்தேம்பி அழுதாரே… !”
“அவர் மட்டுமா அழுதார்.. ஒட்டுமொத்த மந்திரி சபையும் அழுகையுடன்தான் பதவி ஏற்றது. பதவி வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லையே… இதான் அரசியல்” என்று நியூஸ்பாண்ட் சிரிக்க.. நாமும் சிரித்தோம்.
“ஏற்கெனவே ஜெ.வை எதிர்த்து நால்வர் அணி வலம் வந்தது நினைவில்லையா? அவர்கள் வெளியேற காரணம் வேறு. இவர்கள் வெளியேற காரணம் வேறு. ஆனால் முன்னவர்களைப்போலவே இவர்களும் தனி அணியாக செயல்பட திட்டமிடுகிறார்களாம்! ஐவருக்குள் நிறைய சந்திப்புகள் நடக்கிறதாம். நிறைய பேசுகிறார்களாம்.. விரைவில் வெளிப்படையான அறிவிப்புகள் வரலாம்…” என்றார் நியூஸ்பாண்ட்.
“அப்படியானால் அவர்களது அரசியல் எதிர்காலம்?”
“கட்சியில் தொடர்ந்தால், “இருப்பதை” இழக்க வேண்டியிருக்கலாம். ஆகவே பிரிந்து சில காலம் ஐவர் அணி என வலம் வரதிட்டமாம். பிறகு வேறு கட்சியில் கரை ஒதுங்குவதா, அல்லது அரசியலை விட்டே ஒதுங்குவதா என்பதை தீர்மானிப்பார்களாம்!
“ம்.. போதுமென்ற மனத்துக்கு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது!”
“ஆம்.. அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள்!”
“சரி விடும்… கேப்டன் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்? இன்று அவரது கட்சி குழு, டில்லியில் பாஜகவினரோடு பேசப்போகிறதே!”
“ஆம்! அதே நேரம் தி.மு.க. தரப்பில் விஜயகாந்த் மற்றும் சுதீஷை யார் யாரோ தொடர்புகொண்டு பேசுகிறார்களாம். ஐந்தெழுத்து நாளிதழின் தலைமை நிர்வாகியான இனிஷியல் பிரமுகரும் தன் வழியில் விஜயகாந்தை தொடர்புகொள்ள முயற்சித்தாராம். கேப்டன் டென்ஷ்ன் ஆகிவிட்டாராம். “உங்க தரப்புல யார் யார்தான் பேசுவீங்க.. ஒரு வரைமுறையே கிடையாதா” என்று கதவை அடைத்துவிட்டாராம்!”
“அய்யய்யோ.. அப்படியானால் தி.மு.கவுடன் கூட்டணி இல்லையா..?”
“அட… அந்த இனிஷியில் பிரமுகருக்குத்தான் கதவை அடைத்திருக்கிறார். மற்றபடி எல்லா கட்சிக்குமான பேச்சு வார்த்தையை தொடரவே விரும்புகிறார்!”
“ஹூம்…” என்று நாம் பெருமூச்சுவிட…
“இதற்கே அலுத்துக்கொண்டால் எப்படி? மக்கள் நலக்கூட்டணியுடனும் கேப்டன் தரப்பினர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
தி.மு.க.வை நம்பி கூட்டணி வைப்பது காலைக்கட்டிக்கொண்டு ஆற்றில் குதிக்கும் கதை என்று விஜயகாந்த் கமெண்ட் அடித்தாராம். அதே நேரம் பா.ஜ.க. தரப்பில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காது என்று சிக்னல் வந்திருக்கிறதாம். ஆகவே மக்கள் நலக்கூட்டணி பக்கம் பார்வையை திருப்பியிருக்கிறாராம் கேப்டன்!”
“இதென்ன புது கலாட்டா?”
“கேளும்… முதல் வேட்பாளர் என்கிற அந்தஸ்து இங்கே கிடைக்கும். அதோடு, தொலைக்காட்சி வேந்தரும் இந் கூட்டணிக்கு வர தயாராக இருப்பதால், பணப்புழக்குத்துக்கு பஞ்சமிருக்காது. மேலும் வாசனும் இங்கு வருவதாக சொல்கிறாராம்! சமீபத்தில் சிறுத்தை தலைவருடன் பேசியபோது இதையெல்லாம் மனம் விட்டு பேசினாராம் கேப்டன்!”
“தலை சுத்துது…!”
“வெளிப்படையாக கூட்டணிகள் அறிவிக்கும்வரை இப்படித்தான் பேச்சுவார்த்தைகள் நடக்கும்.. தகவல்களும் வந்துகொண்டே இருக்கும்!” என்று சொல்லிவிட்டு கிளம்பினார் நியூஸ்பாண்ட்.