ருத்ராட்சத்தை யார் யார் அணியலாம் ? விவரங்கள்

 

ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும், இல்லறத்தில் ஈடுபடும் போதும், பெண்கள் மாதவிடாய் காலத்திலும், இறப்பு வீட்டிற்கு போகும் போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபுராணம் தெரிவிக்கிறது.

சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்சத்தைப் பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்கலியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் மேன்மையும், வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாட்சமும் நிறைந்திருக்கும்.

எல்லா காலத்திலும் எல்லா வயதினரும் எல்லா நேரங்களிலும் அணிந்து கொண்டே இருக்கலாம் இதனால் பாவமோ தோஷமோ கிடையாது. ருத்ராட்சம் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.

சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே?

குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா? ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது, என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா! நோய் உள்ளவனுக்குத்தான் மருந்து தேவைப்படுகிறது.  நோய் இல்லாதவருக்கு மருந்து தேவையில்லை. அது போல வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள், சிரமங்களில் தவிப்பவர்கள், வேலைவாய்ப்பு இல்லாதவர்கள்,

திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்,  கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள், மன நிம்மதி இல்லாதவர்கள், பிரச்சனைகளில் உலாவிக் கொண்டே இருப்பவர்கள், நாம் எதற்காகப் பிறந்தோம் என்று வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், முதியோர்கள், ஆதரவற்றோர்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், (ஊனமுற்றோர்) மனநிலை, பாதித்தவர்கள், இவர்கள் அனைவரும் ருத்ராட்சம் அணியவேண்டும்.  இவர்களுக்காக தான் ருத்ராட்சம் இறைவனால் அருளப்பட்டது.

ருத்ராட்சம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். நல்வழி நற்கதி முக்திக்கு வழிநடத்தும் எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு உடனே ருத்ராட்சம் அணிந்து கொள்ளுங்கள். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்சம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக  விட்டுவிட முயல வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடக்கூடாது).

ருத்ராட்சம் அணிந்தது முதல் 10008 நாட்களுக்குள்  முழுவதுமாக விட்டுவிட வேண்டும். சுத்த சைவ உணவிற்கு மாறிவிட வேண்டும் அதுவே உத்தமமானது.