பால்வளத்துறை அமைச்சராக உள்ள சா.மு. நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இதுதொடர்பான தமிழக முதல்வரின் பரிந்துரையை ஆளுநரிடம் இன்று சமர்ப்பித்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்வதாக ஆளுநர் மாளிகை இன்று அறிவித்துள்ளது.
இதனையடுத்து மே 11ம் தேதி காலை 10:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் அவர் பதவியேற்கிறார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவராகவும் உள்ள டி.ஆர். பாலு-வின் மகனான டி.ஆர்.பி. ராஜா மன்னார்குடி தொகுதியில் இருந்து 2011, 2016 மற்றும் 2021 என தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக உள்ள டி.ஆர்.பி. ராஜா அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதன் மூலம் அமைச்சரவையில் டெல்டா பகுதிக்கான பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில் கடந்த சில மாதங்களாக பால்வளத்துறை குறிப்பாக ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அமைச்சர் சா.மு. நாசரின் நீக்கம் திமுக அமைச்சர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக பொறுப்பேற்க இருக்கும் டி.ஆர்.பி. ராஜா-வின் இலாகா குறித்த விவரங்கள் மற்றும் அவர் வகிக்கும் தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.