பெங்களூரு:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ஹோட்டலை அடைய சுமார் 2 கிமீ தூரம் ஸ்கூட்டரில் சென்றார். பின் டெலிவரி ஊழியர்களைச் சந்தித்துப் பேசினார்.

கர்நாடக தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன நிலையில், வாக்காளர்களைக் கவரும் முயற்சியில் அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூருவில் தீவிர பிரச்சாரம் செய்துவரும் சூழலில், ​​ராகுல் காந்தி அங்கு ஒரு டெலிவரி ஏஜெண்டின் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சவாரி செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற ஏர்லைன்ஸ் ஹோட்டலில், டுன்சோ, ஸ்விக்கி, ஜொமாடோ, பிளிங்கிட் போன்ற நிறுவனங்களின் டெலிவரி ஏஜெண்டுகளைச் சந்தித்து கலந்துரையாடினார். அந்த வீடியோவை காங்கிரஸ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

ராகுல் காந்தி காபி மற்றும் மசால் தோசையுடன் டெலிவரி தொழிலாளர்களுடன் உரையாடும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது. அப்போது அவர்களின் பணி நிலைமைகள் குறித்தும், பணிபுரியும் போது அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

பின்னர், அவர் டெலிவரி தொழிலாளர் ஒருவரின் ஸ்கூட்டரில் சவாரி செய்தார். ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருக்கும் அவர் நீல நிற ஹெல்மெட் அணிந்திருப்பதைக் காணலாம். சுமார் இரண்டு கிமீ தூரம் ஸ்கூட்டரில் பயணித்துள்ளார்.