பெங்களூரு
தேர்தல்களில் வாக்கு சீட்டுகளைப் பயன்படுத்தும் முறை அமலானால் காங்கிரசும் பாஜகவும் தோல்வி அடையும் என பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி கூறி உள்ளார்
பகுஜன் சமாஜ் கட்சி கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 114 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி,
”பகுஜன் சமாஜ் கட்சி உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த போது சட்டத்தின் ஆட்சி நடந்ததால் தவறு செய்த குற்றவாளிகள் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டனர். இதனால் சாமானிய மக்களுக்கும் நீதி கிடைத்தது. இப்போது அங்கு புல்டோசர், என்கவுன்ட்டர் ஆட்சி நடைபெறுகிறது என்பதால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியின் கோட்டையான உத்தரப் பிரதேசத்திலே அக்கட்சி வலுவிழந்து விட்டது என கூறி வருகின்றன. ஆனால் அது தவறானது தகவல் என்பதை அழுத்தமாகக் கூற விரும்புகிறேன். வாக்குச் சீட்டு மூலம் மக்களவை, மாநிலங்களவை தேர்தல்களில் வாக்குப்பதிவு செய்த போது பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியைப் பிடித்து அதன் வாக்கு சதவீதமும் அதிகரித்திருந்தது.
பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை இழந்தது. இதைப் போல் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்காகக் காங்கிரஸ் திட்டமிட்டு மின்னணு வாக்குப்பதிவு முறையைத் திணித்தது. பாஜக அந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி இப்போது மக்களவை, மாநிலங்களவைத் தேர்தல்களில் முறைகேடுகளைச் செய்கிறது. எனவே மீண்டும் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தித் தேர்தல் நடத்தினால் காங்கிரஸும், பாஜகவும் தோல்வி அடையும்.”
எனத் தனது உரையில் கூறி உள்ளார்.