டில்லி
வலி குறைந்த மரண தண்டனைகளைக் கண்டறியக் குழு அமைக்கப் பரிசீலித்து வருவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மூத்த வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா சார்பில் மரண தண்டனையைத் தூக்குத் தண்டனையாக நிறைவேற்றாமல் வேறு வழிகளில் நிறைவேற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வருகிறது.
கடந்த மாதம் நடந்த விசாரணையில் மூத்த வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா, சட்ட ஆணையத்தின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி படித்துக் காட்டினார். அதில் இந்தியாவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனையானது மிகவும் கொடூரமானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ரிஷி மல்ஹோத்ரா தெரிவித்தார்.
இதையொட்டி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “நாட்டில் நிறைவேற்றப்படும் மரண தண்டனை என்பது தூக்கு தண்டனையாகும். இத்தகைய மரண தண்டனையை, குறைந்த வலியுடன் நிறைவேற்றுவதற்கான மாற்று வழிகள் உள்ளனவா என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலிக்கவேண்டும். இது குறித்து விவாதம் நடத்தி, தகவல்களைச் சேகரித்து அந்தத் தகவல்களை நீதிமன்றத்தில் ஆவணமாகத் தாக்கல் செய்ய வேண்டும்’’ எனக் கூறினார்.
இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி
”மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மரண தண்டனை அளிக்கும்போது குறைவான வலியைத் தரக்கூடிய சாத்தியமான மற்றும் பயனுள்ள மாற்று முறைகளை ஆராய நிபுணர்கள் குழுவை அமைக்குமாறு அரசுக்கு நான் பரிந்துரைத்துள்ளேன். இது குறித்து குழுவை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான ஆவணங்கள் விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.”
எனத் தெரிவித்துள்ளார்.