| ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி (04/௦5/2023) ஸ்பெஷல் ||
||சிம்ஹாசலம் – விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீநரஸிம்ஹ சேஷத்ரம்||
||பிரகலாதர் ஆராதித்த நரஸிம்ஹர்||
பல ஆண்டுகளாகப் புற்றினுள் இருந்த இந்த ஸ்ரீ லக்ஷ்மி நாராயண நரஸிம்ஹர்,
ஒரு பக்தரின் கனவில் தன் இருப்பிடத்தைத் தெரிவித்து, சிம்ஹாசலத்தில் தன்னை பிரதிஷ்டை செய்ய நியமித்ததாக வரலாறு!
பின்பு, குளிர் அதிகமாக இருந்ததால், மீண்டும் புற்றினுள்ளேயே தன்னை விடுமாறும், அந்த சீதோஷணத்தை சந்தனம் கொண்டு புற்றை உருவாக்கிவிடவும், வருடத்திற்கு ஒரு நாள் புற்றிலிருந்து வெளியே வந்து தரிசனம் அருளுவதாகவும் நரஸிம்ஹர் ஸங்கல்பிக்க, அன்று முதல் இப்போதும் 500 கிலோ சந்தனத்துடன் மற்ற கலவைகள் 200 கிலோ என 700 கிலோ புற்றினுள் இருக்கிறார் இந்த நரஸிம்ஹர்!
அக்ஷய திரிதியை அன்று புற்றினை நீக்கி சேவை சாதிக்கிறார் நரஸிம்ஹர்.
பின் மீண்டும் 700 கிலோ சந்தனக் கலவை புற்றினுள் புகுந்து புற்றாகவே சேவை சாதிக்கிறார்.
ஸ்ரீ ராமானுஜர் சிம்ஹாசலம் வந்தபோது, அங்கு சில நாட்கள் விஷயார்த்தங்களை உபந்யாஸமாக சாதிக்க, அதை அனுதினமும் கேட்டுக் கொண்டிருந்த இரண்டு அன்னப்பறவைகள், காலட்சேப முடிவில் பறவை சரீரத்தைத் துறந்து திவ்ய சரீரம் பெற்று, வைகுந்தம் ஏகினதாக வரலாறு! அவ்வாறு ஸ்ரீ ராமானுஜர் அமர்ந்து உபன்யாசம் சாதித்த இடத்திற்கு ஹம்ஸ மூலை என்ற பெயரானது.