டில்லி

லையாளப் படமான தி கேரளா ஸ்டோரி வெளியிட தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திரையுலகில் சமீப காலமாக மதங்களைத் தாக்கும்  படங்கள் வெளிவருவது அதிகரித்து வருகிறது.  அவ்வகையில் தி கேரளா ஸ்டோரி என்னும் மலையாள திரைப்படம் மத மாற்றத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.   இத்திரைப்படம் வரும் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் கபில் சிபல், மற்றும் நிஜாம் பாஷா ஆகியோர் ஒரு மனு தாக்கல் செய்தனர்.   அம்மனுவில், ‘தி கேரளா ஸ்டோரி திரைப்பட டிரெயிலர் காட்சிகளில் குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான வெறுப்பு பேச்சு, பிரச்சாரங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்தப் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு கு|றித்து நடந்த விசாரணையில் வழக்கறிஞர் நிஜாம் பாஷா, “கேரளா ஸ்டோரி படத்தில் மதத்துக்கு எதிரான வகையில் மோசமான வெறுப்பு பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. இது, முற்றிலும் குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான ஆடியோ-வீடியோ பிரச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.  அந்தப் படத்தின் டிரெயிலர் காட்சிகளை 1.6 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள நிலையில், மத துவேஷத்தைத் தூண்டும் வகையில் தி கேரளா ஸ்டோரி படம் அமைந்துள்ளது. இந்த திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகவிருப்பதால் அதற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும்’’ என்றார்.

இதையொட்டி நீதிமன்ற அமர்வு, ”பொதுவாக வெறுக்கத்தக்கப் பேச்சுகளில் பலவகைகள் உள்ளன. மத்திய தணிக்கை வாரியம் இந்த படத்துக்கு உரிய அனுமதியையும், சான்றிதழையும்  வழங்கியுள்ளது.   எனவே. படத்தை வெளியிடத் தடை கோர விரும்பினால் அதற்கு வழங்கப்பட்ட சான்றிதழை எதிர்த்து உரிய அமைப்பில் முறையீடு செய்யவேண்டும்.

தற்போது  இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.  பிறகு அனைவரும் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாடத் தொடங்கி விடுவார்கள். ஆகவே படத்துக்குத் தடை கோரும் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது.” எனத் தெரிவித்துள்ளது.