அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 3 கோடி ரூபாய் வரை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தலைமறைவான அவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அரசியல் நிகழ்வுகளுக்காக தமிழ்நாட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டி உள்ளதால் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் தமிழ்நாட்டை விட்டு ராஜேந்திர பாலாஜி செல்வதை அனுமதிக்க முடியாது எனவும் அவசியம் இருந்தால் எம்.பி., எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தை அணுகி ராஜேந்திர பாலாஜி அதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்திய நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.