பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், திருவள்ளூர் நகரமானது சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
திருவள்ளூர் அருகிலுள்ள பெரியகுப்பம் கிராமத்தில் மிகப் பிரம்மாண்டமான 32 அடி உயரமுள்ள, ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி சிலையானது, பதிவு செய்யப்பட்ட ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி அறக்கட்டளையின் நிறுவனர், குருதேவ் பூஜ்யஸ்ரீ மந்த்ரமூர்த்தி தாசன் S. வெங்கடேச பட்டாச்சாரியார் சுவாமிகளால், 2004 –ம் வருடம் ஜூலைத் திங்கள் 6 –ம் நாள் மகாபிரதிஷ்டை, செய்யப்பட்டது.
இந்த நிகழ்வானது, ஒட்டு மொத்த மனித குலத்தின் நன்மையை கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளதால், மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உலகத்திலேயே, இங்கு மட்டும் தான் மந்த்ர சாஸ்த்ரப்படி மகாபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால், இத்தலம் தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது.
குருதேவ் தனது குருவின் மூலம், தனக்கு கிடைத்த, சக்தி வாய்ந்த பஞ்ச முகங்களான, ஸ்ரீஆஞ்சநேய சுவாமி, ஸ்ரீநரசிம்ம சுவாமி, ஸ்ரீமஹாவீர கருட சுவாமி, ஸ்ரீலஷ்மி வராக சுவாமி மற்றும் ஸ்ரீஹயக்ரீவ சுவாமி ஆகியோரின் மூல மந்த்ரங்களின் பலனானது, ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சென்றடைய வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வு காரணமாகவே, இங்கு ஸ்ரீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமியை பிரதிஷ்டை செய்துள்ளார்.
மந்த்ர சாஸ்த்ரத்தில் வல்லவரான குருதேவ், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அடைந்த துயர்களை, சிறப்பு பரிகாரங்களைச் செய்து களைந்துள்ளார். அவர், காஞ்சி மகாபெரியவாளிடமிருந்து, மந்த்ரமூர்த்தி பட்டம் பெற்ற ஸ்ரீ ரெங்கசுவாமி பட்டாச்சாரியாரை தனது குருவாக அடைந்ததற்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
மண்டபம் கட்டி முடித்த பிறகு, மூல மந்த்ரங்களை, பஞ்ச முகங்களுக்கு எதிரே, சுவற்றில் செதுக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பக்தர்கள் எவரும், இந்த மூல மந்த்ரங்களை உரிய முறையில் ஜெபித்து, அதற்கான பலனை எளிதில் அடையலாம். இது சாத்தியமாவதற்கு, குரு பரம்பரை மகா சக்தியானது அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.