கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தன்னை முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்ததாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
சாமி சிலையை குளிப்பாட்டுவதற்காக 25க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் கோயில் குளத்திற்குள் இறங்கினர்.
அப்போது ஒருவரின் கால் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கியபடி தத்தளித்தார் இதனை அடுத்து அவரை காப்பாற்ற அருகில் இருந்த நான்கு பேர் முயற்சி செய்தபோது அவர்களும் தண்ணீரில் மூழ்கி மொத்தம் 5 பேர் இறந்தனர்.
குளத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களும் அங்கு கூடியிருந்தவர்களும் அவர்களை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் சிலை போல் நின்றிருந்தது அங்கு பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயிலில் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, “சம்பவம் நடைபெற்ற மூவரசம்பட்டு தர்மலிங்கேஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத்திற்கு சொந்தமானது இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும், “கடந்த நான்கு ஆண்டுகளாக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவதாகவும், இந்த குளம் அந்தப் பகுதி பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படுவதாக” கூறினார்.
“தீர்த்தவாரி குறித்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை” என்று கூறிய அவர் “குளத்தை தூர்வாராமல் தீர்த்தவாரி நடைபெற்றது குறித்து முதல்வர் என்னை கண்டித்தார்” என்றும் தெரிவித்துள்ளார்.
“இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என்று குறிப்பிட்ட அவர் இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதி பஞ்சாயத்து, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகத் விளக்கமளித்துள்ளார்.