ஓதிமலையாண்டவர் திருக்கோயில், கோவை மாவட்டம், இரும்பறையில் அமைந்துள்ளது.
முருகப்பெருமானால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும், பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறப்பு எடுத்தன. ஆகவே அவர்களுக்கு இறப்பு ஏற்படவில்லை. இதனால் பூமியில் பாரம் உண்டானது. பூமாதேவி தவித்துப் போனாள். பிறப்பும், இறப்பும் சமமாக இருந்தால்தான், உலக இயக்கம் முறையாக இருக்கும் என்பதால், அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர் முருகப்பெருமானை சந்தித்து, பிரம்மதேவனை சிறையில் இருந்து விடுவித்து, படைப்பு தொழிலை அவரிடமே ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். சுவாமி மலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை சொன்ன முருகப் பெருமான், இத்தலத்தில் வேத, ஆகம விதிகளை சிவபெருமானுக்கு உபதேசம் (ஓதியதால்) செய்ததாக சொல்லப்படுகிறது. எனவே இந்த மலைக்கு ‘ஓதிமலை’ என்று பெயர் வந்தது. மேலும் பிரம்மதேவனை சிறையில் அடைத்த இடம் ‘இரும்பறை’ என்றானது. சிவபெருமானின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரம்மனை சிறையில் இருந்து விடுவித்தார் முருகப்பெருமான். பின்னர் அவருக்கும் பிரவணத்தின் பொருளை உணர்த்தி, படைப்புத் தொழிலை மீண்டும் அவரிடமே ஒப்படைத்தார் என்கிறது கோவில் தல வரலாறு.
இத்தல முருகனுக்கு ‘கவுஞாச வேத மூர்த்தி’ என்ற பெயரும் இருக்கிறது. முருகனை தரிசிப்பதற்கு முன்பு, மலையடிவாரத்தில் வீற்றிருக்கும், சுயம்பு விநாயகரை வழிபட வேண்டும். படைப்புத் தொழிலை மீண்டும் பிரம்மனிடமே கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்காக, கயிலையில் இருந்து தனியாகத்தான் ஓதிமலைக்கு வந்தார், சிவபெருமான். எனவே மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோவிலில் சிவனுக்கு மட்டுமே சன்னிதி உள்ளது. அம்பாளுக்கு சன்னிதி அமைக்கப்படவில்லை. ஆனால் மலையின் மேல் உள்ள கோவிலில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன.
பழனியில் ஆண்டிக்கோலம் பூண்டிருந்த முருகனை தரிசிப்பதற்காக, இந்த வழியாகச் சென்றார், போகர் சித்தர். ஆனால் அவருக்கு வழி தெரியவில்லை. இதனால் இத்தலத்தில் உள்ள முருகப் பெருமானை நினைத்து யாகம் செய்தாராம். அப்போது இந்த ஆலயத்தில் இருந்து ஒரு தலையோடு வெளிப்பட்ட முருகப்பெருமான், போகருக்கு பழனி மலைக்குச் செல்லும் வழியைக் காட்டி அருளினார். அப்படி வழிகாட்டிய அந்த முருகப்பெருமான், ஓதிமலையில் இருந்து சற்று தூரத்தில் உள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கிறார். ஆதி காலத்தில் ஓதிமலை முருகன், ஆறு முகங்களுடன் காட்சியளித்ததாகவும், போகர் சித்தருக்கு வழிகாட்டு வதற்காக ஒரு முகத்துடன் சென்று குமாரபாளையத்தில் அமர்ந்துவிட்டதால், ஓதிமலையில் ஐந்து முகத்தோடு காட்சியளிப்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
எந்த ஒரு தொழிலையும் புதியதாகத் தொடங்குவதற்கு முன்னர், இத்தல முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு செய்வது வழக்கமாக இருக்கிறது. தொழில் மட்டுமல்லாமல், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் செய்வதாக இருந்தாலும் பூ போட்டு கேட்கும் வழக்கம் இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. கல்வியில் நல்ல முன்னேற்றம் அடையவும் இத்தல முருகப்பெருமானை வேண்டிக்கொள்ளலாம். இந்த ஆலயத்தில் சஷ்டி, கிருத்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அதே போல் திங்கள், வெள்ளி, அமாவாசை நாட்களிலும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதுபோன்ற விசேஷ தினங்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் ஆலயத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து விட்டுச் செல்வதே நல்லது.