சூரத்:
பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் தமக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்கிறார்.

பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம்.

2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபப்ட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ராகுல் காந்திக்கு ஆதரவாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. ந்நிலையில் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் நாளை ராகுல் காந்தி மேல்மு9றையீடு செய்ய உள்ளார். இதற்காக ராகுல் காந்தி நாளை சூரத் செல்ல இருக்கிறார்.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அப்போது, நாட்டை விட்டு தப்பி ஓடிய நீரவ் மோடி விவகாரம் பேசுபொருளாக இருந்தது. இதனைக் குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, நாட்டை விட்டு தப்பி ஓடுகிற மோசடிகளின் பெயர்கள் எல்லாம் மோடியாக இருக்கிறது என கேள்வி எழுப்பினார். இது மோடி சமூகத்தினரை இழிவுபடுத்துவதாகும் என கூறி ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிரான இந்த அவதூறு வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அண்மையில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதி0க்கப்பட்டது. அதேநேரத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் இந்த தண்டனை நிறுத்தியும் வைக்கப்பட்டது. இதனிடையே எம்பியாக உள்ள ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. 2 ஆண்டு சிறை தண்டனைக்குப் பிந்தைய 6 ஆண்டுகாலம் அவர் தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலை உருவானது.

ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் முடக்கப்பட்டன.

அதேநேரத்தில், 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? அரசியல் லாபங்களுக்காக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய மறுக்கிறாரா? என பாஜக விமர்சித்து வந்தது. இந்நிலையில்தான் ராகுல் காந்தி சூரத் பயணம் மேற்கொள்கிறார். குஜராத் மாநிலம் சூரத் செல்லும் ராகுல் காந்தி, சூரத் அமர்வு நீதிமன்றத்தில் தமக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக நாளை மேல்முறையீடு செய்ய இருக்கிறார்.