‘வாக்காளர்களை செருப்பால் அடிக்க வேண்டும்…’ என சண்டிகர் பா.ஜ.க. எம்.பி., கிரோன் கெர் பேசியது குறித்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சண்டிகரில் உள்ள கிஷன்கர் பகுதியில் புதனன்று (மார்ச் 15) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கிரோன் கெர் வந்திருந்தார்.
தனது நாடாளுமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசிய போது அவர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிஷன்கர்-க்கு உட்பட்ட தீப் காம்ப்ளக்ஸ் குடியிருப்பு பகுதி வாக்காளர்கள் பற்றிப் பேசும்போது “அவமானம்” மற்றும் “செருப்பால் அடிக்க வேண்டும்” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சண்டிகரில் இருந்து இரண்டாவது முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரோன் கெர், “தீப் காம்ப்ளெக்ஸில் ஒருவர் கூட எனக்கு வாக்களிக்கவில்லை, அது மிகவும் வெட்கக்கேடானது… அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்” என்று அந்த வீடியோ-வில் கூறியுள்ளார்.
மேலும் அவர்களுக்காக சாலை உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை தான் செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
Shocking what chandigarh MP kirron kher has to say for our voters.
Not expected from an elected representative like her pic.twitter.com/PuRFM6YKGL— Harmohinder Singh Lucky (@LUCKYHSINC) March 15, 2023
தனது தொகுதியின் வாக்காளர்களை தகாத வார்த்தைகளைக் கூறி திட்டியதாக குற்றம் சாட்டி அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதுகுறித்து சண்டிகர் பிரதேச மகிளா காங்கிரஸ் தலைவர் தீபா துபே “வாக்களித்த வாக்காளர்களை செருப்பால் அடிக்கவேண்டும் என்று அந்த தொகுதி எம்பி பேசியது வருத்தமளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
சாலைகள் அமைக்க பணம் கொடுத்ததாக கிரோன் கெர் பேசியுள்ளார் “இந்தப் பணத்தை அவர் தனது பாக்கெட்டில் இருந்து கொடுத்தாரா? அவர் இதுபோன்று தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என தீபா துபே கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரதீப் சாப்ரா கூறுகையில், “தீப் காம்ப்ளெக்ஸில் ரூ. 1 கோடி மதிப்பிலான சாலைகள் கட்டப்பட்டுள்ளதாக கிர்ரோன் கெர் கூறியுள்ளார், அதற்காக வாக்காளர்களை கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டும் என்று அர்த்தமில்லை” என்று கூறினார். மேலும், இதற்கு முன் ஆம் ஆத்மி கவுன்சிலர்களை விலங்குகள் என்று பாஜக எம்.பி. கிர்ரோன் கெர் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.
கிஷன்கர் பகுதியில் இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்பி கிர்ரோன் கெர் உடன் சண்டிகர் மேயர் அனூப் குப்தாவும் கலந்து கொண்டார். இந்த வீடியோ வெளியானதையடுத்து, காங்கிரஸ் இளைஞர் அணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வாக்காளர்களை செருப்பால் அடிப்பேன் என்று பேசிய எம்.பி.க்கு காலணிகளை அனுப்பிவைக்கப் போவதாகவும் முடிந்தால் வாக்காளர்களை அதால் அடிக்கவும் கேட்டுக்கொண்டனர்.