புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், விரைவில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைக்கப்படும் என மாநில முதலமைச்சர் ரங்கசாமி கூறினார். அதுபோல விரைவில் பெண்களுக்கு பிங்க் பேருந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் கடந்த 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையத்து நிதிநிலை அறிக்கை மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்று வருகிறது.
பேரவையின் இன்றைய அமர்வின்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, இளைஞர்களின் நலனையும் விளையாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கென தனிதுறை இந்தாண்டு துவக்கப்படும் எனவும், இதற்காக ரூ.530 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பேரவையில் எதிர்கட்சித் தலைவர் சிவா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் பால்பண்ணை நடத்த விரும்பும் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு கறவை மாடுகளை மானிய விலையில் வழங்குவதோடு சலுகை விலையில் பால் கொள்முதலையும் அரசே செய்யும். புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு இருப்பது தெரியும். நாடெங்கும் கால்நடைகளுக்கு ஏற்பட்ட தோல் தடிமன் நோய் பரவலின் காரணமாக பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் பாண்லே பாலின் விலை, தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலின் விலையை காட்டிலும் குறைவாக இருப்பதால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். மேலும் பல உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் தெரிவித்தார்.
போக்குவரத்த தொடர்பான கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரப் பிரியங்கா, பெண்களுக்காக பிங்க் பேருந்துகளை இயக்குவதற்கான திட்டம் தயார் செய்து நிர்பயா திட்டத்தின் கீழ் 25 பேருந்துகள் வாங்க நிதியுதவி பெறுவதற்கு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் பேருந்துகள் வாங்கி விரைவில் இயக்கப்படும் என கூறினார்.
உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மூடப்பட்ட ஏ.எப்.டி பஞ்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.85.38 கோடியும், அதே போல் பாரதி மற்றும் சுதேசி பஞ்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களின் நிலுவைத் தொகையான ரூ.51.33 கோடியும் பகுதி பகுதியாக வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
பேரவையின் பூஜ்ய நேரத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம் மற்றும் நாகதியாகராஜன், புதுச்சேரி மாநிலத்தில் இந்த ஆட்சியில் சமூக விரோத செயல்கள் அதிகம் நடைபெறுகிறது, கட்டபஞ்சாயத்து அதிகரித்துள்ளது. மணல் கொள்ளை தாராளமாக நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என குற்றம் சாட்டினார்.