சென்னை: தமிழ்நாட்டில் 50ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாத விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுதொடர்பாக இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,சென்னை தலைமை செயலகத்தில் இன்று கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். . இதில் துறையின் செயலாளர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி, தேர்வுத் துறை இயக்குனர் நாகராஜ முருகன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் காணொலி வாயிலாக இணைந்திருந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், தேர்வு எழுதாத மாணவர்கள்மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றார்.
மேலும், பிளஸ்-2 பொதுத்தேர்வில் எதனால் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் என ஆய்வு செய்ய வேண்டும் என்றவர், அடுத்தடுத்த தேர்வுகளுக்கு மாணவர்களை வரவழைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றவர், மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து மாவட்ட வாரியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வராதது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
தேர்வின் அவசியத்தை மாணவர்களுக்கு அறிவுறுத்தி பெற்றோர்கள் தேர்வெழுத அனுப்பி வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தவர், அனைத்து மாணவர் களையும் தேர்வெழுத வைக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறோம் என்றும் கூறினார்.
ஏற்கனவே 10ம் வகுப்பில் ஆல் பாஸ் செய்தது கூட மாணவர்கள் தேர்வுக்கு தயங்குவதற்கான ஒரு காரணமாக கருதப்படுகிறது என்று கூறியவர், நடப்பாண்டு, பிளஸ்-1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறினார்.
இனிமேல், ஒவ்வொரு தேர்வு முடிந்த பிறகும், மாலை 3 மணிக்கு மேல், தேர்வு மையத்தில் இருந்து ஒருவர் வெளியில் செல்ல வேண்டும். தேர்வுக்கு வராத மாணவர்கள் ஏன் வரவில்லை என காரணம் ஆராய வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனவும், மாணவர்கள் தேர்வுக்கு வராததற்கான காரணம் அப்போது தான் தெரிய வரும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அப்படி வரும் ஆசிரியர்கள்/ கல்வி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுங்கள் எனவும், கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள் எனவும், இது முடிந்த பிறகு மாவட்ட வாரியாக மொத்தமாக மாவட்ட ஆட்சியர், பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் ஏன் எழுத வில்லை என கரணம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதுதொடர்பாக அடுத்தக்கட்டஆலோசனை கூட்டம் மார்ச் 24அன்று நடைபெற உள்ளது எனவும், அன்று மாணவர்கள் தேர்வுக்கு ஏன் வரவில்லை என காரணம் தெரிவிக்க வேண்டும் எனவும் தேர்வெழுதாத மாணவர்கள் அனைவரையும் மறுதேர்வு எழுத வைக்க வேண்டும் என்பதே இலக்கு. என்றும், இதற்கு பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும் எனவும், கேட்டுக்கொண்டார்.
அடுத்து, ஏப்ரல் 6ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 10இல், மீண்டும் கல்வியாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடை பெறும் எனவும், அப்போது 10ஆம் வகுப்பில் இது போல வருகை இல்லாமல் இருத்திவிட கூடாது என்பதற்காக தற்போதே முயற்சி மேற்கொண்டு வருகிறோம். எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக சென்னை ராணிமேரி கல்லூரியில் இன்று நடை பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ், வைரஸ் தொற்று காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள தேர்வுகளை மாற்றி வைப்பதற்கான முடிவுகள் தற்போது வரை எடுக்கப்படவில்லை. எனவே முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை. வைரஸ் தொற்று அதிகரித்தால் சுகாதாரத்துறையுடன் கலந்து ஆலோசித்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.
12-ம் வகுப்பு தமிழ் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாமல் இருந்துள்ளனர். அதற்கு குடும்ப சூழ்நிலை அல்லது தேர்வு பயம் காரணமா அல்லது 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு என 2 பொதுத் தேர்வுகள் எழுதுவதால் ஏற்படும் அழுத்தம் காரணமா என்பது குறித்து ஆராயப்படும். அதிகமாக தேர்வு எழுத தவறிய மாணவர்கள் அடங்கிய கிருஷ்ணகிரி, கரூர், தர்மபுரி உள்ளி்ட்ட மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம். இப்போது வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு வைப்பது குறித்த முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.