கோவை: பீகார், ஜார்க்கண்ட் மக்கள் இன்னும் பயத்தில் உள்ளனர், அவர்களிடம் அவர்கள் மொழியிலேயே பேச பயத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்துறையினருடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்திகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களிலும், கட்டுமான நிறுவனங்களிலும் பணியாற்றி வந்த பல ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு திரும்பினர். இதையடுத்து, தமிழ்நாட்டின் தொழிற்நிறுவங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, வதந்தி குறித்து, தமிழக காவல்துறையும், மாநிலஅரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து தொழில்துறையினருடன் டிஜிபி சைலேந்திர கோவையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உட்பட உயர் அதிகாரிகளும்பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, கோவை சரகத்தில் உள்ள தொழில் முனைவோர், தொழில் அதிபர்களுடன் சந்தித்தோம். அப்போது புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்குதல் குறித்த வதந்திகளால் ஏற்பட்ட குழப்பம் சரியான முறையில் கையாண்டதற்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. இப்போது நிலைமை சரியாக இருக்கிறது. தொடர்ந்து புலம் பெயர் தொழிலாளர்களுடன் தொடர்ந்து உரையாடல் வைத்து கொள்ளவும் அறிவுறுத்தபட்டுள்ளது.
இது போன்று சம்பவங்கள் நடக்காமல் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வதந்திகளால், பீகார், ஜார்கண்ட் பகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவு பயந்து இருக்கின்றனர். அதனால் அவர்கள் மொழியில் இது தவறானது என தகவல்களை தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஹோலிபண்டிகைக்கு சென்ற தொழிலாளர்கள் 15 நாட்களில் திரும்ப வாய்ப்புள்ளது என்றார்.
மேலும், வைரல் வீடியோ தொடர்பாக இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போபால், பாட்னா உட்பட பல இடங்களில் போலீசார் முகாமிட்டுள்ளனர்.
போலீசார் களநிலவரத்துக்கு ஏற்றபடி பிரச்சனைகளை டீல் பண்ணுவார்கள். சில நேரங்களில் துப்பாக்கியை பயன்படுத்துவார்கள். சில நேரங்களில் லத்தியை பயன்படுத்துவார்கள். சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் கூகுள் பே வில் உங்கள் கணக்கில் தொகையை போட்டு விட்டு, பின் லிங்க் அனுப்பி திருப்பி அனுப்ப சொல்லுவார்கள். அப்படி லிங்க் அனுப்பினால், அதில் சில தகவல் கேட்கும். அப்படி தகவலை தெரிவித்து விட்டால் உங்கள் கணக்கில் இருந்து முழு பணத்தையும் திருடி விடுவார்கள். அப்படி ஏதாவது லிங்க் வந்தால் அந்த எண்ணை பிளாக் பண்ணிவிட்டு, காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
வீட்டை உடைத்து திருடுவதில்லை. வங்கி கணக்கினை சீசனுக்கு ஏற்றபடி திருடுகின்றனர். ஒடிபி வங்கி கணக்கு எண்ணை வங்கிகளில் இருந்து யாரும் கேட்கமாட்டார்கள். இதனால் ஓடிபி எண்ணை யாருக்கும் கொடுக்க கூடாது.
இவ்வாறு கூறினார்.