2022 ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லும் பொறுப்பேற்ற பிறகு இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டின் போக்கையே மாற்றியுள்ளது.

டி-20 போட்டிகளைப் போல் டெஸ்ட் போட்டியை அதிரடியாக விளையாடி வருவதுடன் இதற்கு பாஸ்பால் கிரிக்கெட் என்றும் அவர்களுக்குள் அழைத்து மகிழ்கின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே இதுபோன்று அதிரடியாக விளையாட முடியாது என இங்கிலாந்து அணியை அஸ்வின் எச்சரித்துள்ளார்.

தனது யூ-டியூப் சேனலில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின், தற்போது இருக்கும் இங்கிலாந்து அணி, டி20 தொடரை போன்றே டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இது அனைத்து மைதானங்களுக்கு சரி வராது.

உதாரணமாக, இந்தியா போன்ற நாடுகளில் மைதானங்களுக்கு மரியாதை கொடுத்து விளையாட வேண்டும். இல்லையென்றால் இங்கிலாந்து அணி மிகப் பெரிய சரிவை சந்திக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப்பது போல கடலுக்குள் இறங்கி நீச்சல் அடிக்கலாம் என்று இறங்குவது எப்படி ஆபத்தானதோ அப்படியானது இந்த பாஸ்பால் கிரிக்கெட் என்று எச்சரித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் ஒருநாள் உலக கோப்பை போட்டியைத் தொடர்ந்து 2024 ம் ஆண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.