கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஐபோன் வாங்க பணமில்லாததால் அதை டெலிவரி செய்ய வந்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
ஹாசன் மாவட்டம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஹேமந்த் தத்தா (20) என்பவர் பிளிப்கார்ட் மூலம் பிப்ரவரி தொடக்கத்தில் ஐபோன் ஆர்டர் செய்துள்ளார்.
பிப்ரவரி 7 ம் தேதி ஐபோன் டெலிவரி செய்வதற்காக ஹேமந்த் நாயக் (23) என்ற டெலிவரி ஏஜென்ட் ஹேமந்த் தத்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது பணம் எடுத்து வருவதாகக் கூறி உள்ளே சென்ற தத்தா, நாயக்கை வீட்டின் உள்ளே அமரச்சொல்லி இருக்கிறார்.
நாயக்-கும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்த சில நொடிகளில் பின்னால் இருந்து வந்த ஹேமந்த் தத்தா கத்தியால் வெட்டி இருக்கிறார்.
இதனை சற்றும் எதிர்பாராத ஹேமந்த் நாயக் நிலை குலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து மரணமடைந்தார்.
ஹேமந்த் நாயக்கின் உடலை கோணி பையில் கட்டிய தத்தா அதனை மூன்று நாட்கள் அப்படியே தனது வீட்டிற்குள் வைத்துள்ளார்.
பின்னர் பிப் 11 ம் தேதி பிணத்தை கொப்பளு ரயில்வே கேட் பகுதிக்கு எடுத்துச் சென்று தண்டவாளம் அருகே போட்டுவிட்டு அதன்மீது பெட்ரோல் ஊற்றி அடையாளம் தெரியாதபடி கொளுத்தியுள்ளார்.
அதேவேளையில், டெலிவரிக்காக சென்ற ஹேமந்த் நாயக்-கை காணலாம் அவரது சகோதரர் மஞ்சு நாயக் அரசேக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கொப்பளு ரயில்வே கேட் பகுதியில் அடையாளம் தெரியாத பிணம் ஒன்று இருப்பது குறித்து தகவல் கிடைத்தது.
பிணத்தைக் கைப்பற்றிய போலீசார் சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள பெட்ரோல் பங்குகளில் சந்தேகப்படும் வகையில் பெட்ரோல் வாங்கிய நபர் குறித்த தகவலை சேகரித்துள்ளனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக பெட்ரோலை கேனில் வாங்கிச் சென்ற நபர் குறித்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்திய போலீசார் இது தொடர்பாக ஹேமந்த் தத்தா என்ற 20 வயது இளைஞரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் பணம் இல்லாமல் செகண்ட் ஹாண்ட் ஐபோன் ஆர்டர் செய்ததாகவும் அதை டெலிவரி செய்ய வந்த நபரை கொலை செய்ததாகவும் ஹேமந்த் தத்தா ஒப்புக்கொண்டுள்ளார்.
ஐபோன் டெலிவரி செய்ய வந்த ஒரு அப்பாவி இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.