சென்னை: சென்னை பெரம்பூர் நகைக்கடையில் கொள்ளையடித்தவர்கள் வட மாநில கொள்ளையவர்கள் என்றும், அவர்களை தேடி வருவதாகவும், சென்னை மாநகர காவல்ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார்.
சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் 2 மாடிகள் கொண்ட வீட்டின் 2-வது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன் (60). அதில் முதல் தளத்தில் ‘ஜே.எல்.கோல்டு பேலஸ்’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடையின் ஷட்டரை துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், நகை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த சுமார் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து உடனடியாக திரு.வி.க.நகர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மெயின்ரோட்டில் நடைபெற்ற இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு நேர ரோந்து போலீசார் என்ன செய்துகொண்டிருந்தனர் என்ற கேள்வியும் எழுந்தது.
இதையடுத்து, கொள்ளை நடைபெற்ற நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்க்கையும் தூக்கிச்சென்றதால், கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
மேலும் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்தபோது, சம்பவம் நடக்கும் முன்பு, அப்பகுதியில் ஒரு சொகுசு கார் கடையை நோட்டமிட்டதும், நள்ளிரவுக்குப் பிறகு கடையின் முன்னால் வந்து நின்ற அந்த காரில் இருந்து சிலர் இறங்கி நகைக்கடைக்கு செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
மேலும், சத்தம் வராத நவீன காஸ் வெல்டிங் கருவியைப் பயன்படுத்தி கடையின் ஷட்டரை ஒருவர் துளையிடுவதும், அந்த துளையின் வழியாக சிலர் உள்ளே சென்று நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு வெளியே வருவதும், பின்னர் அந்த காரில் ஏறி தப்பிச் செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
அவர்கள் வந்த காரின் பதிவெண்ணை போலீஸார் ஆய்வு செய்தபோது, அது போலியான பதிவெண் கொண்ட கார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கார் சென்ற வழித்தடத்தை போலீஸார் ஆய்வு செய்தபோது, அந்தக் கார், கோயம்பேடு வழியாக பூந்தமல்லி நோக்கி சென்றது. பின்னர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியைக் கடந்து கார் சென்றுள்ளது. இதனால் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வர்களாக இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து, இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் 6 தனிப்படை போலீஸார் வெளிமாநிலத்துக்கு விரைந்துள்ளனர். மேலும், கொள்ளைச் சம்பவம் நடந்தபோது, அங்கிருந்த செல்போன் டவரைப் பயன்படுத்தி, அந்த நேரத்தில் பதிவான செல்போன் எண்களைக் கைப்பற்றும் பணியிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் பயன்படுத்திய போலி பதிவெண் கொண்ட கார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை நகைக்கடை கொள்ளையை, வெளிமாநில கொள்ளையர்கள் திட்டமிட்டுஅரங்கேற்றி உள்ளனர். வெளிமாநில கொள்ளையர்கள் என்பதால் அவர்களை பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என காவல் ஆணையர் விளக்கம் அளித்தார்.
இதையடுத்து சென்னை ஐஐடி மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரம் குறித்தும் பேசிய சங்கர் ஜிவால், உயிரை மாய்த்துக் கொண்ட மற்றும் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவர்களிடம் இருந்து கடிதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலும், பிரேத பரிசோதனை அறிக்கையை அடிப்படையாக வைத்தும் தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும்.
சென்னை ஐஐடியில் செயல்படும் நிர்வாக குழு விசாரணை நடத்தி வருவதாகவும், ஆசிரியர்கள் கொடுத்த மன அழுத்தம் காரணமாக மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டாரா என்ற கோணத்திலும் , சாட்சியங்களை அடிப்படையாக வைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க மேலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர்
சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
மேலும் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரம் தொடர்பாக சென்னை சைபர் கிரைம் உதவியை நாடியுள்ளதாக கூறிய ஆணையர் சங்கர் ஜிவால், திருவண்ணாமலை கொள்ளையர்களை பிடிக்க தொழில்நுட்ப ரீதியாகவும், செல்போன் அழைப்புகள் உள்ளிட்டவை மூலமாகவும் சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் போலீசார் உதவி வருவதாக தெரிவித்துள்ளார்.
அதே போல் சென்னை யானைகவுனியில் நகைக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தீவிரவாத தொடர்புக்கு உட்பட்டவர்களா என எந்த தகவலும் இல்லை எனவும் கூறினார். செல்போன் மற்றும் செயின் பறிப்புகளை பொறுத்தவரையில், கடந்த 2021-ஆம் ஆண்டு 470 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்தாண்டு 230 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பாதியாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தால் ரோந்து வாகனம் 2 நிமிடம் 15 விநாடிகளுக்குள் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். நகைக்கடை உரிமையாளர்கள் தங்கள் பகுதி காவல் நிலைய எண் உள்ளிட்ட விவகாரங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் சென்னை காவல்துறை ஆணையர் அறிவுரை வழங்கியுள்ளார்.
முன்னதாக ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால், ரோஜா மலர்களையும் பரிசாக அளித்தார். காதலர் தினத்தை முன்னிட்டு இந்த சிகப்பு ரோஜாக்களை நான் பரிசாக அளிக்கவில்லை எனவும் முன்கூட்டியே திட்டமிட்ட நிகழ்வு இது என வேடிக்கையாக தெரிவித்தார்.