திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதை அரசு அலுவலகம் என பெயர் பலகை வைத்து, பணம் வாங்கிக்கொண்டு, 51 பேருக்கு பணியாணை வழங்கி, பணியும் கொடுத்த 4 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த செங்குன்றம் மகாராஜா நகர் பகுதியை சேர்ந்த டுவின்பாபு. தற்போது வேலையில்லாமல் வெட்டியாக திரியும் இவர், தனது, கல்லூரி நண்பரான வசந்தகுமார் சந்தித்திருக்கிறார். அவர் வெட்டியாக உள்ள நிலையில், , தனக்கு அரசு வேலை கிடைத்துள்ளதாக பீலா விட்டுள்ளார். மேலும், பணம் கொடுத்து, . வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் இள நிலை உதவியாளராக சேர்ந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதை நம்பி சந்தோஷமடைந்த டுவின்பாபு, வசந்தகுமாரிடம், தனக்கும் அரசு வேலை வாங்கி தரும்படியும், அதற்கு பணம் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதனால், என்ன செய்யலாம் என்று யோசித்த வசந்தகுமார், நீயும் பணம் கொடுத்தால், அரசு வேலைகள் வாங்கித் தருவதாகவும் கூறியிருக்கிறார். அதனை நம்பிய டுவின்பாபுவும், தனது மனைவிக்காக, தம்பிக்காக மற்றும் தனக்காக என மொத்தம் மூன்றரை லட்சம் ரூபாயை கொடுத்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து, வசந்தகுமார், தனது நண்பர்களான, மோகன், வட்சலா, ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து, திட்டம் தீட்டி, அரசு வேலை என்ற பெயரில் பணத்தை சுருட்டலாம் என எண்ணி அதற்கான பணிகளை தொடங்கினர். அதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் காவலர் ஒருவருக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவை மற்றும் பதிவேடு துறை என்ற பேனர் வைத்து, அதன் அட்மினாக வத்சலாவை வைத்து, தங்களது வேலையை தொடங்கி உள்ளனர்.
இதையடுத்து, முதல் கட்டமாக வசந்தகுமார் மூலம் பணம் பெற்ற மூவருக்கும் ஐடி கார்டுகள் மற்றும் மாவட்ட வருவாய் ஆய்வாளர் அசோகனின் பெயரில் போலி கையெழுத்தில் போலி முத்திரையுடன் பணி ஆணையும் வழங்கியிருக்கின்றனர். அவர்களும், போலி அரசு அலுவலகத்திற்க சென்று வேலையிலும் சேர்ந்திருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து டுவின் பாபுவின் நண்பர் மணிகண்டேஸ்வரன், உறவினர்கள் என பத்துக்கும் மேற்பட்டோரிடம் 15 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வாங்கிக் கொண்டு அதே போன்ற பணி ஆணை, ஐடி கார்டுகள் ஆகியவற்றையும் வழங்கினர். சுமார் 51 பேர், அநத் போலி அரசு அலுவலகத்தில் பணியில் சேர்ந்ததாகவும், அவர்களுக்கு சந்தேகம் வராதபடி, குறைந்த பட்ச சம்பளமாக ரூ.10000 ஆயிரம் முதல் 15ஆயிரம் வரை (அவர்களிடம் இருந்து வேலைக்காக பெறப்பட்ட பணத்திற்கு தகுந்தவாறு) மாத சம்பளம் கொடுத்தும் வந்திருக்கின்றனர்.
மேலும், அவர்களை கள ஆய்வு என்ற வெளியில் அனுப்பி சர்வே எடுக்கவும், ஆறு குளங்களை கணக்கெடுப்பது உள்பட பல்வேறு பணிகளுக்கு அனுப்பி, தங்கள்மீது சந்தேகம் ஏற்படாத வகையில் அலுவலகத்தை நடத்தி வந்திருகின்றனர். ஆனால், இதுதொடர்பாக சிலருக்கு சந்தேகம் ஏற்படவே அவர்கள் உண்மையான அரசு அலுவலகத்தில் சென்று விசாரித்தபோது, இதுபோன்ற ஒரு அலுவலகமே கிடையாது என்பதும், அவர்களது பணி ஆணை அரசு ஆணை இல்லை என்பதும் வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது.
இதையடுத்து, வசந்தகுமார் மீது திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டுவின் பாபு புகார் அளிக்க, போலீசார் நடத்திய விசாரணையில், மேலும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தன.
தனியார் பள்ளியில் பணிபுரிந்த வசந்தகுமாரை கொரோனா காலத்தில் பணி நீக்கம் செய்திருக்கின்றனர். அங்கே பணிபுரிந்த ஜானகி என்பவர் கூறியபடி அவரது கணவரும் ஆதிதிராவிட நல விடுதி வார்டனுமான மோகனை வசந்தகுமார் சந்தித்திருக்கிறார். இதையடுத்து வசந்தகுமாரிடம் 2 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்ட மோகன், ஊரக வளர்ச்சித் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான பணி ஆணை, ஐடி கார்டு கொடுத்து ஏமாற்றி இருக்கிறார். மேலும் மோகன், ஸ்டாலின், வத்சலா மூவரும் வசந்தகுமார் மூலமே பலரை அணுக வைத்து அரசு வேலை எனக் கூறி பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதும் தெரிய வந்தது.
வசந்தகுமார், ஸ்டாலின், மோகன், வத்சலா ஆகிய நான்கு பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் வசந்தகுமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மூவரையும் தேடி வருகின்றனர். இதேபோல் டுவின் பாபுவின் நண்பர் மணிகண்டேஸ்வரன், உறவினர்கள் என பத்துக்கும் மேற்பட்டோரிடம் 15 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வாங்கிக் கொண்டு அதே போன்ற பணி ஆணை, ஐடி கார்டுகள் ஆகியவற்றையும் வழங்கினர்.
இந்த மோசடி மூலம் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றரை கோடிக்F\கும் மேல் சம்பாதித்துள்ளதும், அதில் ஒரு பகுதிதான் சம்பளம், அலுவலகம் வாடகை என கொடுத்து சந்தேகம் ஏற்படாத வகையில் செயல்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.