சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தாமதத்திற்கு மத்தியஅரசுதான் காரணம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.
மதுரை எய்ம்ஸ் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் கடுமையான முறையில் பதில் அளித்தார். திமுக எம்.பி.க்கள் வேண்டுமென்றே இந்த விஷயத்தில் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கைகளுடன் 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள். 2019ம் ஆண்டு எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான பணிகளை மத்திய அரசு தொடக்கி வைத்துச் சென்றது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் 222 ஏக்கர் நிலம் அன்றைக்கே ஒப்படைக்கப்பட்டு விட்டது.
மதுரை எய்ம்ஸ்-க்கு நிலப்பிரச்னை எதுவும் இல்லை. நிதி பிரச்சனை தான் உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க ஒன்றிய அரசிடம் பல முறை வலியுறுத்தினோம். 50 மாணவர்கள் சேர்க்கைக்கு மதுரை தனியார் மருத்துவக் கல்லூரி, புதுவை ஜிப்மர் கல்லூரியில் சேர்க்க சொன்னார்கள். ஜிப்மர் வேறு மாநிலம், கலைக்கல்லூரியிலோ, தனியார் மருத்துவ கலைக்கல்லூரியிலோ சேர்த்தால் சரியாக இருக்காது என்பதால், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதலாம் ஆண்டு மாணவர்கள் 50 பேர், 2ம் ஆண்டு மாணவர்கள் 50 பேர் என மொத்தம் 100 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு எய்ம்ஸ் தவிர பிற மாநிலத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்தியஅரசு நிதி ஒதுக்குகிறது. மதுரையோடு அறிவிக்கப்பட்ட ராய்ப்பூர் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஜப்பான் நிதி உதவியுடன் மதுரை எய்ம்ஸ் பணிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். 2024ம் ஆண்டு இறுதியில் தான் பணிகள் தொடங்க முடியும் என கூறியுள்ளனர். 2028ல் முடிவடையும் என தெரிவித்துள்ளனர்,’என்றார்.
தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டையில் நடந்த சிலிண்டர் விபத்து குறித்து பேசிய அமைச்சர், ‘சிலிண்டர் விபத்தில் காயம் அடைந்த 5 பேரில் 2 பேருக்கு 70% பாதிப்பு.. 2 பேருக்கு 40% பாதிப்பு, ஒருவருக்கு 32% பாதிப்பு. சிலிண்டர் வெடித்த விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்,’என்றார்.