டெல்லி: மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி.க்கள் மத்திய அமைச்சரிடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் திமுக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த 3 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இதுவரை கட்டிடம் கட்டும் பணிகள் ஏதும் நடக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக கடந்த ஆண்டு விளக்கம் அளித்த மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1977 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், பணிகள் 2021 முதல் 2026ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாக இயக்குநர், நிர்வாக துணை இயக்குநர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் இன்னும் கட்டுமானங்கள் தொடங்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு முதல் எய்ம்ஸ் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் இன்று மக்களவையில் வெடித்தது. இன்றைய கேள்வி நேரத்தின்போது, மதுரை எய்ம்ஸ் விவகாரம் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, திமுக எம்.பிக்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, “போதிய ஆசிரியர் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாத மருத்துவக் கல்லூரிகளை இயக்க நான் அனுமதிக்க மாட்டேன் என கூறியவர், மதுரையில் எய்ம்ஸ் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுகாதாரத்தை அரசியலின் பிரச்சினையாக ஆக்காதீர்கள்” என்று சுகாதார அமைச்சர் மாண்டவியா ஆவேசமாக கூறினார்.
மேலும், நாட்டில் மருத்துவக் கல்வியை விரிவுபடுத்த மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்கள் மருத்துவக் கல்விக்காக வெளிநாடு செல்லத் தேவையில்லை. 2014ம் ஆண்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் நாட்டில் இருந்த நிலையில், தற்போது 657 ஆக அதிகரித்துள்ளது.
மாநில அரசுகள், தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்கும்போது, பல்வேறு விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. கடந்த 2022ல் 37 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளித்தோம், 89 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன” எனத் தெரிவித்தார்
அப்போது திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள், எழுந்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி என்னாயிற்று, அதன் நிலை என்ன, ஏன் இன்னும் மதுரை எய்ம்ஸ் கல்லூரி செயல்படவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய அமைச்சர் மாண்டவியா கடும் கோபத்துடன் “ மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி கட்டுவதற்காக ரூ.1900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்
அவரது பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.பி.க்கள் மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி கட்டப்படவில்லை, தயாராகவில்லை என்று சத்தமிட்டனர்.காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் மக்களவையில் இருந்து காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனால் கோபமடைந்த மாண்டவியா “தவறான தகவலை அவையில் திமுக எம்.பி.க்கள் கூறுகிறார்கள், மக்களை திசை திருப்பும் செயல். சிலர் அனைத்திலும் அரசியல் செய்ய முயல்கிறார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்ப துஎனக்குத் தெரியும், மருத்துவக்கல்லூரியில் ஊழியர்கள், பணியாளர்கள் , கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்ததற்கு கடும் நடவடிக்கை நான் எடுத்திருக்கிறேன். இதுதான் என்னுடைய பதில்.
இதுபோன்ற முறைகேடுகளை மோடிஅரசு அனுமதிக்காது, மோசமான மருத்துவக்கல்லூரிகள் மீது நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்
மத்திய அமைச்சர் மாண்டவியா பேச்சுக்கு திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் ஆட்சேபமும் எதிர்ப்பும் தெரிவித்தனர். மாண்டவியாவுக்கு ஆதரவாக, பாஜக எம்.பி.க்களும் எழுந்து கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து திமுக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து கூறிய சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர் பேசிய வார்த்தைகள் சரியானதா அல்லது தவறானதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று மக்களவைத் தலைவர் தெரிவி்த்தார்