சென்னை:  கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் மறு ஆய்வு சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசிடம் மெட்ரோ நிர்வாகம் சமர்ப்பித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையைத் தொடர்ந்து, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. தற்போது,  சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.  மேலும் தற்பேதாத 2-வது கட்ட மெட்ரோ பணிகள்  ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.   அதற்கான திட்டபணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான மறுஆய்வு அறிக்கையை மெட்ரோ நிர்வாகம் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

ஏற்கனவே  கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி செலவும் ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பின்னர்,. அவினாசி சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலம் கட்டப்படவுள்ளது. நெடுஞ்சாலை வந்தால் இந்த சாலையில் போக்குவரத்து எப்படி இருக்கும் என்பது தொடர்பாக கூடுதலாக ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதுபோல, மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ துாரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.8 ஆயிரம் கோடி செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் வெளி வீதிகளின் வழியாக செல்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு வெளி வீதிகளின் வழியாக நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்தக் கட்டுமான பணிகளால் பாரம்பரிய கட்டுமானங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நெடுஞ்சாலை மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களின் வழித்தடங்களை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 46 கிலோ மீட்டர் தொலைவில் அமைய உள்ள முதற்கட்ட பணிகளுக்கு ரூ.9,424 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பே விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்பித்தது.  கோவையில் மொத்தம் 139 கி.மீ. தூரத்துக்கு 3 கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

முதல் கட்டமாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் 46 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், அதற்கான சாத்திய கூறுகளை மறு ஆய்வு செய்து மெட்ரோ நிர்வாகம்  தமிழ்நாடு அரசிடம் அறிக்கை சமர்பித்துள்ளது.

அதேபோல் மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறு ஆய்வு அறிக்கையை மட்டும் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தக்கட்டமாக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வரும் மெட்ரோ நிறுவனம் அதன் இறுதி கட்ட பணிகளை செய்து வருகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்த உயர்மட்ட பாதையில் மட்டும் செல்ல ரூ.6,000 கோடி செலவாகும் எனவும், உயர் மற்றும் சுரங்கப்பாதையோடு செல்ல ரூ.8,000 கோடி செலவு ஆகும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை, மதுரையில் லைட் மெட்ரோ, மாஸ் மெட்ரோ ரயில் திட்டத்தின் மறு ஆய்வு சாத்தியக்கூறு அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.