ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ திட்டமிட்டபடி இன்று காலை 9:18க்கு மணிக்கு எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இதில் பள்ளி மாணவர்கள் தயாரித்த ஆசாதி சாட் உள்பட 3 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
புவி கண்காணிப்பிற்காக இஓஎஸ் 7, ஆசாதி சாட் 2 மற்றும் ஜேனஸ் 1 உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களை புவிவட்ட சுற்றுப்பாதையில் இஸ்ரோ நிலைநிறுத்துகிறது.. இதில், இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட இஓஎஸ் 7 செயற்கைக்கோள் சுமார் 156 கிலோ எடை கொண்டதாகும்.
ஆசாதி சாட்2 செயற்கைக் கோளை, 75 பள்ளிகளை சேர்ந்த சுமார் 750 பள்ளி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். ஜேனஸ் 1 செயற்கைக் கோள் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்ததாகும். இந்த 3 செயற்கைக்கோள்களை, ‘எஸ்.எஸ்.எல்.வி டி2’ ராக்கெட் மூலம் 15 நிமிட பயணத்தில் 450 கி.மீ. புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
175.2 கிலோ எடை கொண்ட மூன்று செயற்கைக்கோள்களை புவி வட்ட சுற்றுப்பாதையில் 450 கிலோமீட்டர் உயரத்தில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விண்ணில் பாய்ந்த அடுத்த 15 (900 நொடி) நிமிடங்களில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இதனிடையே தேசிய மாணவர் படை அமைப்பின் 75 ஆவது ஆண்டு தினத்தை கொண்டாடும் வகையில், தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான பாடலை இந்த ராக்கெட்டில் ஒலிக்கவிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி-டி1 ராக்கெட் இரண்டாம் கட்ட நிலையில் தோல்வி அடைந்தது. இந்நிலையில், சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு, எஸ்எஸ்எல்வி – டி2 ராக்கெட் உருவாக்கப்பட்டு. இன்ற ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 9.18 மணிக்கு எஸ்.எஸ்.எல்.வி-டி2 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.
புவிகண்காணிப்பு, தொலைத்தொடர்பு மேம்படுத்துதல் மற்றும் அளவீச்சு கதிர்களை அளவிடுதல் போன்ற பயன்பாடுகளுக்காக செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு குறைவாக நிலைநிறுத்த எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட்களை இஸ்ரோ உருவாக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.