ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் உள்பட 80 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தேர்தலில் போட்டியில்லை என்று கூறிய அமமுக வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு உள்ளது
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதையடடுத்து, டிசம்பர் 31ந்தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கி பிப்ரவரி 7ந்தேதியுடன் நிறைவுபெற்றது.
இந்த இடைத்தேர்தலில், மொத்தம் 121 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்ததாக கூறப்பட்டது. திமுககூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக இவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா போட்டியில் உள்ளனர். மற்றவர்கள் பல்வேறு அமைப்புகள் மற்றும் சுயேச்சையாக களத்தில் இறங்கி உள்ளனர்.
இந்த வேட்புமனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், 80 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளதாகவும், 41 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். இதில் தேர்தலில் போட்டியில்லை என்று கூறிய அமமுக வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு உள்ளது.