சென்னை: மெரீனா கடலுக்குள் கலை பேனா சின்னம் அமைக்கத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு, மறைந்த கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், மெரினா கடலுக்குள் கருணாநிதி பேனா சின்னம் ரூ.81 கோடி செலவில், 42 மீட்டா் உயரத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்துக்க, 2022ம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம், அனுமதி அளித்த நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டது
இதற்கிடையில், கடலில் பேனா சின்னம் அமைக்க தடை விதிக்கக் கோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக் கோரியும் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் என்பவா் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கான பதில் மனுவில் தமிழக அரசு, ‘அனைத்துத் துறைகளின் அனுமதியையும் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்’ என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது.
ஆனால், சென்னையில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டம் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது ஆதரவாளர்களை திரட்டி வந்து அமர வைத்ததுடன், பேனா சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்களை பேச விடாமல் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மீனவர்கள், எதிர்க்கட்சியினர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட பலர் தங்களது கருத்துக்களை தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்னை மெரீனா கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடலில் பேனா சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என ரிட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் பெரிய கடற்கரைகளில் ஒன்றான, மெரினாவில் ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர்களுக்கு வரிசையாக நினைவிடம் அமைத்துள்ளனர். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என 4 கல்லறைகள் கட்டப்பட்டு, மெரினா கடற்கரையை கல்லறைத் தோட்டமாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கடலுக்குள் போன சின்னம் அமைக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவது தமிழ்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.