டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஒரு ரூபாயில் வரவு – செலவு குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31ந்தேதி) குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று 2வது நாள் அமர்வு நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மோடி தலைமையிலான நடப்பு 5ஆண்டு கால ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 11மணி அளவில் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்தியப் பொருளாதாரம் ஒளிரும் நட்சத்திரம் என்றும், தொழிற்துறையினருக்கான பட்ஜெட் என்று கூறினார். மேலும், இந்த பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்டாக இருக்கும் என்றும் விவசாய கடன் வழங்க ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது உள்பட ”7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன். கூறினார்.
ஒரு ரூபாயில் வரவு:
அதன்படி, நாட்டின் வருவாயில் ஒரு ரூபாயில் வருமான வரி மூலம் 15 காசுகள் பெறப்படுகின்றன. மத்திய வரிகள் மூலம் 7 பைசா கிடைக்கின்றன. கம்பெனிகள் வரிகள் மூலம் 15 பைசா கிடைக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரிகள் மூலம் 17 பைசா கிடைக்கின்றன. கடன்கள் மற்றும் இதர வருவாய் மூலம் 34 பைசா பெறப்படுகிறது. வரியில்லா வருமானங்கள் மூலம் 6 பைசா கிடைக்கின்றன. கடனில்லா முதலீட்டு வருவாய் மூலம் 2 பைசா கிடைக்கின்றன. கலால் வரி மூலம் 4 பைசா கிடைக்கின்றன.
ஒரு ரூபாயில் செலவு
ஒரு ரூபாயில் பென்சன் திட்டங்களுக்காக 4 பைசா செலவிடப்படுகிறது. இதர செலவுகளுக்கு 8 பைசா செலவிடப்படுகிறது. மாநிலங்களுக்கான வரி பகிர்விற்காக 18 பைசா செலவிடப்படுகிறது. நிதி ஆணையம் மற்றும் பிற இதர பரிமாற்றங்களுக்காக 9 பைசா செலவிடப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்காக 17 பைசா செலவிடப்படுகிறது. பாதுகாப்புத்துறைக்கு 8 பைசா செலவிடப்படுகிறது. மானியங்களுக்காக 7 பைசா செலவிடப்படுகிறது. மத்திய அரசின் நிதி உதவி மூலம் நடத்தப்படும் திட்டங்களுக்கு 9 பைசா செலவிடப்படுகிறது. வட்டிகளுக்காக 20 பைசா செலவிடப்படுகிறது/
இவ்வாறு மத்திய நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.