சென்னை: தேசிய கீதம் இசைக்கும்போது, எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை. அதை மதிக்காமல், தேசிய கீதம் பாடும்போது, அதை அவமதிக்கும் வகையில் பலர் நடந்துகொள்ளும் செயல் சமீப காலமாக அரங்கேறி வருகிறது. இது தேசத்தையே அவமதிக்கும் செயல்.
இந்த நிலையில், தேசிய கீதம் இசைக்கும் , அமர்ந்து இருந்த நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இது பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில், நெல்லையில், குடியரசு தினத்தன்று தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அதில் கலந்துகொண்ட மாநகர மேயர், ஆணையாளர் உள்பட சிலர் மேடையிலேயே அமர்ந்திருந்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
நாமக்கல்லில் கடந்த 28ம் தேதி அன்று அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, நாமக்கல்லை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் சிவபிரகாசம் தேசிய கீதத்தை மதிக்காமல் சேரில் அமர்ந்து செல்போனில் பேசியபடி இருந்தார். போனில் பேசி முடித்துவிட்டு சாவகாசமாக எழுந்து நின்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, உதவி ஆய்வாளரை இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டார். எஸ்பியின் நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், குடியரசு தினத்தன்று, நெல்லையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ள னர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட மேயர், ஆணையாளர் உள்பட சிலர், தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நாற்காலியில் அமர்ந்து தேசிய கீதத்தை அவமதித்தனர். பாளையங்கோட்டை குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேசிய கீதத்தை இசை வடிவில் இசைத்தனர். தேசிய கீதம் முடியும் முன்னரே தங்கள் நாற்காலியில் மேயர், ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அமர்ந்துள்ளது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோவும் வைரலானது. இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டு முடிக்கும் வரை குடியரசு தலைவர் முதல் அனைத்து தரப்பு மக்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது வழக்கம். அவ்வாறு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என பள்ளி குழந்தைகளுக்கு கூட தெரியும். ஆனால் இந்திய குடிமைப் பணி படித்து பதவியில் உள்ள ஒரு நபர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் ஆகியோர் தேசிய கீதத்தை அவமரியாதை செய்யும் விதமாக நாற்காலியில் அமர்ந்திருந்தது தேசத்தையே அவமதிக்கும் செயல். பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னுதாரமாக திகழ வேண்டிய மேயரும், அரசு அதிகாரிகளும், தேசிய கீதத்தை அவமதித்த குற்றத்திற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக வலைதளங்களில் நெட்டிசின்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நாமக்கல்லில் காவல் ஆய்வாளர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதுபோல, நெல்லை விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.