ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பிப்ரவரி 3ந்தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. அதையடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுக கூட்டணி சார்பில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து, வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளனர். அதே வேளையில் தேமுதிக, அமமுக வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. மநீம திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது. நாம் தமிழர் கட்சியும் தனது வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுத்தாக்கல் வரும் 31ந்தேதி தொடங்க உள்ளது. இந்தநிலையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும், இ வி கே எஸ் இளங்கோவன் பிப்ரவரி 3ந்தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.