சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் வேட்பாளராக இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடும் நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடுபவர் குறித்து இதுவரை யாரும் அறிவிக்கவில்லை. காங்கிரஸ் வேட்பாளருக்கு, திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியும் இன்று ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், யாருக்கும் ஆதரவு இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். ஏற்கனவே, பாமக யாருக்கும் ஆதரவு இல்லை என தெரிவித்து உள்ளது. ஆனால், தேமுதிக, நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது.
இது குறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நேற்று (ஜன.24) காலை சென்னை தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனைக்கூட்டம் நடந்ததை அறிவீர்கள்.
மேலும், நேற்று மாலை உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசித்து, முழுமையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. எந்தக் கட்சியினருக்கும், யாருக்கும் ஆதரவு அளிக்க வேண்டாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முன்னோடிகளும், சகோதர, சகோதரிகளும் தொடர்ந்து மக்கள் நலனுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்பட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.