கட்டுரைகள், கேள்விகள் என தங்களுக்கு சவாலாக உள்ள பல்வேறு பாடங்களுக்கான விடைகளுக்கு செயற்கை நுண்ணறிவு எனும் AI உதவியைக் கொண்டு விடையளிப்பது மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது.
“இந்த மாணவனுக்குள் இப்படி ஒரு திறமையா” என்று ஆசிரியர்கள் வியக்குமளவிற்கு இவர்களின் பதில்கள் அமைந்து வருகிறது.
கூகுளை விட அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கி வரும் சேட்-ஜிபிடி (ChatGPT) என்ற AI இணையத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் பதில்கள் பெரும்பாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியான பதில்களை அள்ளி வீசுகிறது.
ChatGPT என்ற இந்த AI இணையத்தள பயன்பாடு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 வயது மாணவரான எட்வர்ட் தியான், கட்டுரைகள் ChatGPTயால் எழுதப்பட்டதா என்பதைக் கண்டறிய புதிதாக ஒரு செயலியை உருவாக்கியுள்ளார், இதற்கு ஜிபிடி-ஜீரோ (GPTZero) என்று பெயரிடப்பட்டுள்ளது.
மனித மூளையின் ஆற்றல் எந்த ஒரு சவாலான கேள்வியையும் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் பதிலளிக்கக் கூடியது. கடினமான ஒரு வாக்கியத்தை எழுதிய பின் சில எளிய வாக்கியங்களை எழுதவே முற்படும்.
இதனை அடிப்படையாக வைத்து கட்டுரை முழுதும் கடினமான சொற்கள் நிறைந்துள்ளதா அல்லது சவாலான இடங்களில் அதற்கான பதில் எப்படி உள்ளது ஆகியவற்றை இந்த புதிய GPTZero செயலி மூலம் ஆய்வு செய்து இது AI உதவியுடன் எழுதப்பட்ட கட்டுரையா என்பதை தீர்மானிக்கிறது.
எட்வர்ட் தியானின் இந்த புதிய செயலியை தொடர்ந்து ChatGPT செயலியை உருவாக்கிய OpenAI நிறுவனம் AI உலகில் தனது ஆளுமையை தக்கவைத்துக் கொள்ள இனி தனது ChatGPT மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் பதில்களுக்கு வாட்டர் மார்க் போன்ற குறியீடுகளை வழங்க முடிவு செய்துள்ளது.
இருந்தபோதும், மென்பொருள்களைக் கொண்டு பள்ளி கல்லூரிகளில் கட்டுரை மற்றும் கேள்விகளுக்கான பதில்களை எளிதாக எழுதிவந்த மாணவர்களுக்கு இந்த GPTZero வரவு வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.
மேலும், இந்த புதிய செயலியை உருவாக்கிய மாணவரும் நம்மைப்போல் பாதிக்கப்பட்டிருப்பாரோ என்று ஆசிரியர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.