சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன், 2022-23 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் தொடர்பான ஆய்வறிக்கை வெளியிட்டார். அதில்,  மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவுகள் ரூ.2,31,407 கோடி, மொத்த வருவாய் வரவுகள் ரூ.1,12,143 கோடி

தமிழ்நாடு  நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ள 2022-23 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் தொடர்பான அறிக்கையில் கூறியிருப்ப தாவது,

சில சட்டப் பிரிவுகளுக்கு இணங்க 2022-2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீடு தொடர்பான வரவுகள் மற்றும் செலவுகளின் போக்குகள் குறித்த ஏப்ரல் முதல் செப்டம்பர் 2022 வரையிலான 6 மாத காலத்திற்கான ஆய்வினை 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 30 ஆம் நாளன்று நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவு சட்டமன்றப் பேரவை முன் வைக்கப்படுகின்றது.

இந்திய அரசின் உதவி மானியங்கள் மற்றும் மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு உட்பட 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவுகள் ரூ.2,31,407 கோடியாகும். 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.1,12,143 கோடியாகும்.

இது 2022-2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் கணிக்கப்பட்ட வருவாய் வரவுகளில் 48.46 சதவீதமாகும். இது 2021-2022ஆம் ஆண்டில் அதே காலக்கட்டத்தில் பெறப்பட்ட வருவாய் வரவுகளைக் காட்டிலும் 31.61 சதவீதம் கூடுதலாகும். மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் குறித்த ஒப்பீட்டு விவரம் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் சொந்த வரி வருவாய்

2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான முதல் 6 மாதங்களில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.72,441 கோடியாகும். இது 2022-23 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 50.73 சதவீதமாகும்.

இது முந்தைய ஆண்டின் அதாவது 2021-2022 ஆம் ஆண்டு அதே காலகட்டத்தில் பெறப்பட்ட வருவாயோடு ஒப்பிடும்போது 36.92 சதவீதம் உயர்ந்துள்ளது.

மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய்

2022-23 வரவு செலவுத் திட்ட மதிப்பீடான ரூ.15,537 கோடியில், கடந்த ஆண்டு செப்டம்பர் வரை பெறப்பட்ட வருவாய் ரூ.5,994 கோடியாகும். இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட ரூ.3,974 கோடி வருவாயை காட்டிலும் 50.83 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது, 2022-23 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 38.58 சதவீதமாகவும் உள்ளது.

மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கு 15-வது நிதிக்குழுவினர் பரிந்துரையின்படி, மத்திய வரிகளில் மாநில அரசுகளுக்கான நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு 2020-2021ஆம் ஆண்டு 4.189 சதவீதத்திலிருந்து 2021-22 ஆம் ஆண்டில் 4.079 சதவீதமாக சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் உதவி மானியங்கள்

2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு நிதி அளிக்கும் திட்டங்கள் உள்பட, இந்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள் ரூ.39,759 கோடி என கணிக்கப்பட்டதில், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.18,367 கோடி பெறப்பட்டுள்ளது. இது 2022-23 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கணக்கிப்பட்ட உதவி மானியத்தில் 46.20 சதவீதமாகும்.  செப்டம்பர் 2022 வரை பெறப்பட்டுள்ள வருவாய் இதே காலக்கட்டத்தில் முந்தைய ஆண்டு பெறப்பட்ட ரூ.17,717 கோடியைக் காட்டிலும் 3.67 சதவீதம் வளர்ச்சியைக் காட்டுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நிர்வாகப் நிதி பொறுப்புடைமைச் சட்டம்-2003 (சட்டம் எண்:16 / 2003), தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் பிரிவு 6(2) ஆனது, நிதித்துறைப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர், அரையாண்டிற்கு ஒரு முறை திட்டமதிப்பீட்டில் கணிக்கிட்டவாறு வருவாய் மற்றும் செலவினம்

உள்ளதா ஆய்வு செய்து, வரவினம் மற்றும் செலவினத்தில் உள்ள தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு,

வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டின் படியான குறியீடுகளை எய்துவதற்கு ஆய்வுசெய்து, தீர்வு முறைகளைக் கண்டறிந்து, அந்த ஆய்வு முடிவுகளை சட்டமன்றப் பேரவையின் முன் வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.