சென்னை: தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பியதுடன், ரவுடிகிளைப்போல, வாக்குப்பதிவு மையத்தை அடித்து உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்  சங்கத்திற்கு 2ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தபட வேண்டும். கடந்த 2016 நவம்பர் 23 தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன், துணை தலைவராக ஆர்.சுதா, செயலாளராக கிருஷ்ண குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை. 2016ம் ஆண்டு வெற்றி பெற்றவர்களின் பதவிக்காலம் கடந்த 2018 ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில். சங்க தேர்தல்  வழக்குகள் தொடரப்பட்ட நிலையில்,  தேர்தல் தள்ளிபோனது.

இதுதொடர்பான பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு, ஜனவரி 9ந்தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,  தேர்தல் அலுவலராக கபீர் நியமனம் செய்யப்பட்டு,  தேர்தல் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த தேர்தலில் 4696 வழக்கறிஞர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளைய செயற்குழு உறுப்பினர்கள் பதிவுக்கு தேர்தல் நடைபெறும் வகையில், டிசம்பர் 14ந்தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. அதைத்தொடர்ந்து வழக்கறிஞர் சங்க தலைவர் பதவிக்கு ஜி.மோகனகிருஷ்ணன், எம். வேல்முருகன், சத்தியபால் செயலாளர் பதவிக்கு கிருஷ்ணகுமார் உள்பட பலர் மனுத்தாக்கல் செய்தனர். அது தொடர்பான நடைமுறைகள் முடிந்து இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவின்போது, சில வழக்கறிஞர்கள்,  வாக்கு சீட்டுகளுக்கான கியூஆர் கோடு சீட்டுகளை வெளியே எடுத்து சென்றதாக எழுந்த தகவல்களைத் தொடர்ந்து,  சுமூகமான முறையில் நடந்து வந்த தேர்தல் வன்முறைக்களமானது, இதனால் வாக்கு சாவடியில் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து  சிலர் வழக்கறிஞர்கள்  வாக்கு சாவடியில் தகராறு செய்ததுடன், வாக்குப்பதிவு இயந்திரம் உள்பட,  அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை சிலர் அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான வழக்கறிர்கள் அங்கு கூடினர்.

பிரச்னை பெரிய அளவுக்கு மாறியதால் தேர்தல் நடத்தும் அதிகாரியான மூத்த வழக்கறிஞர் கபீர் தேர்தலை தள்ளி வைப்பதாக அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘இந்த சம்பவம் குறித்து தலைமை நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் நாள் அறிவிக்கப்படும்’’ என்றார். 6 ஆண்டுகளுக்கு பின்னர் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற தேர்தல் தள்ளி வைக்கப்படுவது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.