சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரையின்போது, ஆளுநர் உரையில் இருந்த, திராவிட மாடல், திராடம் என்ற வார்த்தைகைள ஆளுநர் ரவி தவிர்த்து உரையாற்றினார். ஆனால், தமிழ்நாடு என்ற வார்த்தையை அவ்வாறே வாசித்தார். திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்தது, மரபு மீறல் என காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வ பெருந்தகை குற்றம் சாட்டினார்.
நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையின்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக கூட்டணி கட்சிகள், ஆளுநர் எதிரே வந்து கோஷமிட்டனர். இதையடுத்து, காங்கிரஸ் கட்சி உள்பட திமுக கூட்டணி கட்சிகளின் எம்எல்எக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த, காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை, தமிழ்நாடு ஆளுநர் ரவி தொடர்ந்து தமிழக மக்களுக்கு எதிராகவும், தமிழகத்திற்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும்தான் செயல்பட்டுகொண்டு இருக்கிறார். அரசியல் அமைப்பு சட்டத்தை மதிப்பது கிடையாது.
அரசியலமைப்பு சட்டத்திற்கு மேலானவராக தன்னை கற்பனையாக கருதுகிறார். தொடர்ந்து அவருடைய போக்கு, பாதையெல்லாம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகதான் நடைபெற்றுகொண்டு இருக்கிறது. இந்திய வரலாற்றில், இந்திய ஆளுநர் வரலாற்றில், குறிப்பாக தமிழக ஆளுநர் வரலாற்றில் இதுவரை இப்படிப்பட்ட ஒரு மோசமான, அரசியல் அமைப்புக்கு எதிராக செயல்படுகின்ற ஆளுநரை தமிழ்நாடு பார்த்ததில்லை.
ஆளுநர் உரை என்பது என்ன? இந்த வருடம் தமிழ்நாட்டிற்கு தேவையான நலத்திட்டங்கள், தமிழ்நாட்டின் செயல்திட்டங்கள் போன்றவற்றை தொகுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆளுநரை படிக்க சொல்லுகிறது. இதுதான் ஆளுநர் வேலை. இதுதான் மரபு. அதைதான் படிக்க வேண்டும். இதை எல்லாம் செய்யாமல் இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் போன்று, அரசு எழுதி கொடுக்கின்ற கருத்தை, தொகுப்பை படிக்காமல் தன்னுடைய இஷ்டத்திற்கு படிக்கிறார் என்றால் இது வன்மையாக கண்டிக்கிற செயல். ” என்று கடுமையாக விமர்சித்தார்.
முன்னதாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த, காங்கிரஸ் உள்பட திமுக கூட்டணி கட்சியினர் செய்தியாளர்கள் முன்பு ஆளுநருக்கு எதிராக முழுக்கமிட்டனர். அதில், ஆர்.எஸ்.எஸ் கொள்கையை, பிஜேபி கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்காதே! எங்கள் நாடு, எங்கள் நாடு.. தமிழ்நாடு எங்கள் நாடு! பிடிக்கவில்லை என்றால் வெளியேறு வெளியேறு.. ஆளுநரே வெளியேறு புறக்கணிக்கிறோம் உங்கள் வருகையை புறக்கணிக்கிறோம் “ என்று முழுக்கமிட்டனர்.
‘திராவிட மாடல்’ என்ற வார்த்தையை தவிர்த்த ஆளுநர் – கவர்னர் அருகே கோஷமிட்ட எம்எல்ஏக்கள்… பரபரப்பு