ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான ஈ.வெ.ரா.இ.திருமகன் காலமானார். அவருக்கு வயது 45. 59 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்த சிறப்பு திருமகன் பெரியாரின் பேரன் என்ற பெருமைக்கு சொந்தமானவர்.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 45 வயதேயான  ஈ.வெ.ரா.இ.திருமகன். இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இவிகேஎஸ் இளங்கோவன் மகன். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில், மாநில பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சமீப நாட்களாக வீட்டிலேயே இருந்தே சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில், அவரது உடல்  திடீரென நலிவடைந்து இன்று மதியம் அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் திருமகனை, உடடினயாக அருகே உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர் இதையடுத்து அவரது உடல் ஈரோட்டில் கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.

திருமகன் மரணம் செய்தியை கேட்டதும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  இதுபற்றி சென்னையில் இருந்த இவிகேஎஸ் இளங்கோவனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.   தகவல் அறிந்ததும்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

திருமகன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஈரோட்டில் உள்ள அவரது வீட்டில்வைக்கப்பட்டு உள்ளது. அங்க காங்கிரசார் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தந்தை பெரியாரின் கொள்ளு பேரனான இவர் முதல் முதலாக சட்டசபைக்கு சென்றதால் ஈரோடு காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்காத அளவுக்கு திருமகன் சிறுவயதிலேதயே மரணம் அடைந்துள்ளார்.  இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவிகேஎஸ்இ திருமகன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக இருந்தார். 2014ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்தார். 2016-ம் ஆண்டு முதல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்தார். 2021-ம் ஆண்டு முதல் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.