சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, யுடியூப் சேனலை சேர்ந்த ஒருவர் எழுப்பிய கேள்வியால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ரபேல் வாட்சை செய்தியாளர்களிடம் கழற்றி கொடுத்த அண்ணாமலை.. யூடியூப் சேனலுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது? என மிரட்டும் தொனியில் பேசினார். இது செய்தியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராமுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை திநகரில் உள்ள மாநில பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கனிமொழி கலந்துகொண்ட கூட்டத்தில், திமுக இளைஞர் அணி நிர்வாக்கள், “பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் தாமதமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் தொடர் வலியுறுத்தலால் 2 நாட்களுக்கு பிறகு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது காவல்துறை மீது அழுத்தம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது இதற்கான காரணத்தை காவல்துறை தெரிவிக்க வேண்டும் என கூறியவர்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன ,அதில் தமிழகஅரசு கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியவர், புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் மனித மலம் குடிநீரில் கலக்கப்பட்டுள்ளது , பட்டியலின் மக்களை கோயிலில் அனுமதிக்காதது உள்ளிட்ட பிரச்சனைகள் நடந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இறையூர் கிராமம் சாட்சியாக உள்ளது. முதலமைச்சர் அந்த ஊருக்கு மூத்த அமைச்சர்களை அனுப்பி வைக்கவில்லை.
ஆர்கே நகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் மாநகராட்சி பணியாளரை நிர்ப்பந்தித்து வெறும் கைகளால் கழிவு நீரை அகற்ற வைத்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டம் மூலம் எபினேசர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எபினேசரை கைது செய்ய வேண்டும், திமுக சாதி ஆதிக்கம் உள்ள கட்சியாக உள்ளது.
திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை செய்யப்பட்டுள்ளார் , சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மஸ்தானின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நான் காவல்துறை உயரதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் புகைப்படங்களை அனுப்பி இருந்தேன்.
ஈஷாவில் இருந்த பெண்கள் மரணமடைந்தது குறித்து முத்தரசன் கருத்துகளை தெரிவித்துள்ளார் , அங்கு இருந்த பெண்கள் காணாமல் போனது குறித்து தமிழக அரசின் கட்டப்பட்டில் உள்ள காவல்துறையிடம் முத்தரசன் முறையிடலாம்.
பெண் காவலரிடம் தவறாக நடந்தவர்கள் மீது உடனடியாக எந்த நடவடிக்கை எடுக்காதது குறித்து முதல்வரிடம் ஏன்? எந்த செய்தி நிறுவனங்களும் கேள்வி கேட்கவில்லை.
கமலாலயத்திற்கு வந்தால் வந்தும் அனைவருக்கும் கேள்வி கேட்கும் துணிச்சல் வந்துவிடுகிறது. என்னிடம் இங்கு கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள் உட்பட அனைவரின் மீதும் 2.63 லட்சம் தமிழக அரசின் கடன் இருக்கிறது என்றார்.
ஆதார் இருக்கும்போது புதிதாக மாநில அரசு மக்கள் ஐடியை ஏன் வழங்க வேண்டும்? அதனால் என்ன பயன்? திமுக கனவில் கூட தமிழ்நாட்டை தனி நாடு ஆக்க வேண்டும் என நினைத்து பார்க்க முடியாது, அதற்கான துணிச்சல் திமுகவிற்கு கிடையாது. யாரிடமோ காசு வாங்கி கொண்டு மக்கள் ஐடிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர்.
திமுக அமைச்சர் ஒருவரின் பாலியல் வீடியோ கடந்த ஆண்டில் வெளியானது , அதை 48 மணி நேரத்திற்கு பிறகு எந்த சேனலும் ஒளிபரப்பவில்லை.
பாவாடை நாடாவை அவிழ்த்து பார்ப்பேன் என சொன்னவர்கள் , ஒரு கட்சி தலைவியின் முடியை பிடித்து இழுத்தவர்கள்தான் திமுகவினர்” எனக் கூறினார்.
மேலும், ராகுல் காந்தியின் யாத்திரை கேலியாக உள்ளது. தேசத்தில் பிரிவு ஏற்படுத்தும் நபர்களோடு தான் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார் என்றார்.
தொடர்ந்து, காயத்ரி ரகுராம் விலகல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது, ” என்னுடைய பாலிசி கட்சியிலிருந்து யார் விலகினாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவதே எனது வாடிக்கை. எங்கு சென்றாலும் அவர்கள் நல்லா இருக்கட்டும். வாழ்க்கையில் நினைத்தது எல்லாம் கிடைக்கணும் . கட்சியிலிருந்து வெளியே செல்வோர் என்னையோ, கட்சியையோ புகழ்ந்து விட்டு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. மகளிர் அதிக அளவில் பாஜகவை நோக்கி வருகிறார்கள். யாரோ ஒருவருக்கு பிடிக்கவில்லை என கட்சியை விட்டுப் போகிறார்கள் என்றால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது “என்றார்.
அப்போது அண்ணாமலையிடம், ரஃபேல் வாட்ஜ் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களிடம் நீங்கள் எந்த சேனல் என கேட்டு மிரட்டும் வகையில் பேசியதுடன், யூடியூப் சேனலை எல்லாம் யார் உள்ளே விட்டது. யூடியூப் சேனலுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது? 40 ஆயிரம் ரூபாய்க்கு கேமரா, நான்கு லைக்குகளை வைத்துக்கொண்டு நீ என்னிடம் கேள்வி கேட்பாயா? என அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதைத்தொடர்ந்து, தான் கட்டி இருந்த ரபேல் வாட்சை செய்தியாளரிடம் கழற்றி கொடுத்து இதுகுறித்து விசாரிக்குமாறு தெரிவித்ததோடு, யூடியூப் சேனலை செய்தியாளர் சந்திப்பில் அனுமதிக்க கூடாது தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த செயலால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.