சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்  என அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

2022- 23 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே வெளியிட்டார்.‘ அதன்படி, மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில்,  தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி,  அனைத்து பள்ளிகளும் நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடப்பாண்டு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சம் பேர் எழுத உள்ளதாக கல்வித்துறை தெரிவித்து உள்ளது.  12ம் வகுப்பு   செய்முறை தேர்வு அடுத்த மாதம் நடைபெற இருப்பதால் ஹால் டிக்கெட் வெளி யிடப்பட உள்ளது. பள்ளிகள் பதிவிறக்கம் செய்து சரிபார்க்கப்பட்டு, பின்னர் தேர்வுக்கு முன்பு மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கேட் (GATE) நுழைவுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. gate.iitk.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிப்ரவரி 4 முதல் 12-ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது