ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2022-23 பிக் பாஷ் லீக் (பி.பி.எல்) தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் பிரிஸ்பேன் ஹீட் – சிட்னி சிக்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பிரிஸ்பேன் நகரில் நேற்றிரவு நடைபெற்றது.

வெற்றிபெற 225 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியின் ஜோர்டான் சில்க் 18.2 வது ஓவரில் அவுட்டானார்.

பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் என்று அதிரடியாக விளையாடிய ஜோர்டான் சில்க் அவுட்டானது ஆட்டத்தின் போக்கை மாற்றியதோடு மட்டுமல்லாமல் அவர் அவுட்டான விதம் சமூக வலைதளத்தில் விவாதப் பொருளானது.

பிரிஸ்பேன் ஹீட் அணியின் ஆல்ரவுண்டர் மைக்கேல் நெசரின் அசத்தலான அவுட்ஃபீல்ட் கேட்ச் குறித்து இருவேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

மார்க் ஸ்டெகெட்டியின் பந்துவீச்சில் ஜோர்டான் சில்க் அடித்த பந்தை எல்லைக் கோட்டின் அருகே நின்றிருந்த மைக்கேல் நெசர் ஓடி வந்து பிடித்தார்.

இருந்தபோதும் எல்லைக் கோட்ட்டிற்குள் கேட்சை பிடிக்க முடியலாம் திணறிய நெசர் பந்தை பிடித்த வேகத்தில் மேலே தூக்கி எறிந்து பின்னர் பவுண்டரி லைனுக்கு வெளியில் சென்றார்.

தூக்கி வீசிய பந்தை பவுண்டரி லைனுக்குள் இருந்தபடி தரையில் கால்படாமல் மீண்டும் பிடித்து மைதானத்துக்குள் வீசிய நெசர் பின் தானும் மைதானத்துக்குள் தாவி கேட்ச்சை நிறைவு செய்தார்.

இது அனைத்தும் சில நொடிகளில் நடைபெற்ற நிலையில் நெசரின் சமயோசிதம் மற்றும் ஆட்டத்தின் போக்கை தீர்மானித்த கேட்ச்சை பிடித்ததற்காக அவரை பாராட்டி வருகின்றனர்.

அதேவேளையில், இது கிரிக்கெட் விதிகளுக்கு புறம்பானது என்றும் விமர்சித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து விதிகளின் படி இது கேட்ச் அவுட் என்று எம்.சி.சி. விளக்கமளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.