புதுச்சேரி:
புதுச்சேரியில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் இருந்த புதுச்சேரியை இந்திய அரசுடன் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த போது இணைத்தார். 1963 ஆம் ஆண்டு சட்டம் அலுவல் விதிகள் அமல்படுத்தப்பட்டு புதுச்சேரி, காரைக்கால், மஹே மற்றும் ஏனாம் பகுதிகள் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசமாக மாறியது. அதன்படி புதுச்சேரி நிர்வாகத்தின் முழு அதிகாரமும் துணைநிலை ஆளுநர் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதனிடையே கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி புதுச்சேரி மாநில கழக செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்த போது மாநில வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருந்தது. வெவ்வேறு கட்சிகள் ஆட்சி அமைத்த போது அரசியல் கண்ணோட்டத்தோடு பார்த்ததால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர், முதலமைச்சருக்கு தொடர்ந்து எதிர்மறையான கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது மாநில நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு ஜனநாயகம் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுகிறது.

இதன் காரணமாக பல்வேறு அமைப்புகள் மாநில அந்தஸ்து தொடர்பாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி டிசம்பர் 28 ஆம் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த முழு அடைப்புக்கு மாநில அந்தஸ்தை விரும்புபவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கிடையில் முழு அடைப்புக்கு அனுமதியளிக்கக்கூடாது என திமுக சார்பில், காவல்துறையில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிமுகவின் முழு அடைப்பு போராட்டம் நடக்கவுள்ள நிலையில், அதிகாலையில் முன்னெச்சரிக்கையாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அன்பழகன், பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கும் நிலையில், திமுக புகாரில் தன்னை கைது செய்தது தவறு என கூறியுள்ளார்.