சென்னை: நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்றுக்கொண்டவர்கள்; பழமைவாதிகள் அல்ல..” என தாம்பரம் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
இந்திய வரலாற்று பேரவையின் 81 வது மாநாடு சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் இன்று (டிசம்பர் 27 ) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டை இன்று சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்று திரிபு என்று கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ 26 ஆண்டுகளுக்கு முன்பு, 1996ம் ஆண்டு இந்திய வரலாற்று காங்கிரஸ் மாநாடு நடந்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த மாநாட்டில் அன்று முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி கலந்துகொண்டு உரையாற்றி இருக்கிறார்கள்.
இப்போது நடைபெறும் இந்த மாநாட்டில் நான் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளேன். இந்திய வரலாற்று பேரவையில் 81 வது மாநாட்டு அமர்வை நடத்துவதற்கு தமிழ்நாட்டை தேர்வு செய்ததற்கு நான் எனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன். இதற்கு காரணமாக இருந்த அத்தனை பேரையும் என் மனதார பாராட்டுகிறேன்.
1935ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த வரலாற்று அமைப்பானது 87 ஆண்டுகளை கடந்து வரலாறு படைத்து வருகிறது. எந்த அமைப்பாக இருந்தாலும் அதனை உருவாகுவது எளிது. ஆனால் தொடர்ந்து நடத்துவதுதான் கடினம். தொடர்ச்சியாக இந்த அமைப்பின் நிர்வாக தலைமை பதவிக்கு வந்தவர்களில் ஆர்வத்தால், இது இத்தகைய மாபெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது.
உண்மையான வரலாற்றை, அறிவுபூர்வமான வரலாற்றை வடித்து தருவதுதான் இந்திய வரலாற்று காங்கிரஸின் மிக முக்கிய குறிக்கோளாக இருந்துள்ளது. குறிப்பாக மதசார்பற்ற அறிவியல்பூர்வமான வரலாற்றை எழுவதில் ஊக்குவித்து வருகிறீர்கள். பல தலைமுறைகளாக வரலாற்று ஆசிரியர்களை ஊக்குவித்தும் வருகிறீர்கள்.
வரலாற்றை படித்தால் என்ன ஆக போகிறது? வேலை கிடைக்குமா? சம்பளம் கிடைக்குமா என்ற எண்ணம் இருந்து வருகிறது. வரலாறு என்பது வேலைக்காக, படிப்புக்காக, பட்டத்திற்காக, சம்பளத்திற்காக மட்டும் அல்ல. நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக படித்தாக வேண்டும். கடந்த கால வரலாறை படிப்பவர்களால்தான் நிகழ் காலத்தில் வரலாறு படைக்க முடியும். எதிர் காலத்தை கணிக்க முடியும். அப்படி படைக்கப்பட வேண்டிய வரலாறு அறிவியல்பூர்வமான, உண்மையான வகையில் அது அமைந்திட வேண்டும்.
கற்பனை கதைகளை சிலர் வரலாறாக சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது. அதனை ஏற்க கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதனை ஏற்று கொள்ளாது. இன்று நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்து என்பது இந்த வரலாற்று திரிபுதான். கல்வி, மொழி, பண்பாட்டு, பொருளாதாரம், நிர்வாகம் ஆக அனைத்திலும் இந்திய அரசியலைப்பு சட்டத்தின் மாண்புகள் காப்பாற்றப்பட வேண்டும். இத்தகைய சூழலில் இந்திய வரலாற்று பேரவையின் பணி என்பது மிக மிக முக்கியம்.
1994ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் வழங்கிய தீர்ப்பை நினைவூட்ட கடமைப்பட்டு இருக்கிறேன். மதசார்பின்மை என்பது நமது அரசியலைப்பு சட்டத்தின் அடிப்படை தன்மையாகும். அதை எந்தவகையிலும் மீறுவதை அனுமதிக்க முடியாது. எந்தவொரு கட்சியும் மதவாத கட்சியும் இயங்க அனுமதிக்க கூடாது. பல்வேறு மதங்களை பின்பற்ற கூடியவர்களை பிளவுப்படுத்தி, படுகொலையை தூண்டு சக்தியை இயங்க அனுமதித்தால் ஜனநாயகமே இல்லாமல் போய்விடும். ஒரு மதசார்பற்ற அரசு அந்த சக்திகளை கட்டுப்படுத்தி, அழித்து சமுதாயத்தை முன்னேறியநிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அத்தகைய மதசார்பற்ற சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபட வேண்டும். இந்தியாவின் நிலப்பரப்பு ஒரு காலத்தில் அப்படிதான் இருந்தது. இடையில் ஒருசிலரால் உருவாக்கப்பட்டதே வேற்றுமைகள். இந்த வேற்றுமைகளை, ஏற்றத்தாழ்வுகளை, பொய்களை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி உண்மையான வரலாறுகளை எழுதவேண்டும்.
தமிழ்நாடு தொன்மையான வரலாறு கொண்ட நிலப்பரப்பு. இங்கே இந்த மாநாடு நடத்துவது மிக மிக பொருத்தமானது. நாங்கள் பழம் பெருமைகள் மீது பற்றுக்கொண்டவர்கள்தான் ; ஆனால், பழமைவாதிகள் அல்ல. அறிவியல்ரீதியான ஆதாரங்களை கொண்டுதான் எங்கள் பெருமைகளை பேசுகிறோம்.”
இவ்வாறு கூறினார்.