c new
 
“இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுகிறார்களே என்று நான் காவலரிடம் கேட்டேன்.
ஜாதியவாதம் மிகவும் மோசமானது என்றார்.
இந்த ஜாதியவாதத்திலிருந்துதானே நாங்கள் விடுதலை கேட்கிறோம் என்றேன்.
அப்படியானால் இதில் தவறேதும் இல்லையே… இதில் தேசத்துரோகம் ஏதும் இல்லையே என்றார்.
சரி, ஒரு விஷயம் சொல்லுங்கள்… உங்கள் சிஸ்டத்தில் யாருக்கு மிகவும் அதிக அதிகாரம் இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம் என்றேன்.
என் கையில் இருக்கும் தடிக்குத்தான் என்றார்.
மிகச்சரியாகச் சொன்னீர்கள்… சரி, இதைச் சொல்லுங்கள் – உங்கள் தடியை உங்கள் விருப்பப்படி பயன்படுத்த முடியுமா?
அவர் சொன்னார் – இல்லை, முடியாது.
எல்லா அதிகாரமும் யாரிடமும் குவிந்திருக்கிறது என்று கேட்டேன்.
போலி ட்வீட்களை வைத்து அறிக்கை விடுகிறார்களே அவர்களிடம் குவிந்திருக்கிறது என்றார்.
போலி ட்வீட்களை வைத்து அறிக்கை விடுகிறார்களே…. அந்த சங்கப் பரிவாரத்திடமிருந்து விடுதலை கேட்கிறோம் என்றேன்.
நான் சொன்னேன் – நண்பா… நானும் நீயும் ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.
ஆனால் இதில் ஒரு சிரமம் இருக்கிறது. நான் எல்லா மீடியாக்காரர்களையும் குற்றம் சொல்லவில்லை. அடக்கத்துடன் சொல்கிறேன். மீடியாக்காரர்கள் எல்லாரும் சம்பளத்தை “அங்கிருந்து” பெறுவதில்லை. சிலர் “அங்கிருந்துதான்” பெறுகிறார்கள். அப்புறம்… மீடியாவில் வேலை செய்யச் செய்ய… பார்லிமென்ட்டுக்கு வெளியிலிருந்து செய்திகளைத் திரட்டத்திரட்ட பார்லிமென்ட்டுக்குள் நுழையும் முயற்சியில் இருக்கிறார்களே சில மீடியாக்காரர்கள்… அவர்கள்தான் இப்படியொரு சூழலை உருவாக்கி விட்டார்கள் ….
அந்தக் காவலர் சொன்னார்… உண்மையைச் சொன்னால் நண்பனே… உன்னுடைய பெயர் எஃப்ஐஆரில் வந்ததுமே நினைத்தேன்….. நீ எப்போது வந்தாலும் சரி…….
நான் சொன்னேன் – எஃப்ஐஆரில் வருவதற்கு முன்னால் ஏபிவிபியின் துண்டறிக்கையில் வந்து விட்டது.
ஆமாம் நண்பர்களே, ஏபிவிபி துண்டறிக்கையில்தான் முதல் குற்றவாளி என்று முதலில் என் பெயர் குறிப்பிடப்பட்டு விட்டது. அதன் பிறகுதான் எப்ஐஆரில் இடம்பெற்றது. ( ! )
காவலர் சொன்னார் – எஃப்ஐஆரில் உன் பெயரைப் பார்த்தபோது, நீ வந்ததும் உன்னை நையப் புடைக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நண்பனே… உன்னோடு பேசிய பிறகு எனக்கு என்ன ஆசை என்றால்…. அவர்களைப் போய் நையப் புடைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
அந்தக் காவலர் மிக முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நண்பர்களே. இந்த நேரத்தில் மீடியாவின் வாயிலாக நாட்டு மக்களுக்கு ஒரு விஷயத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்தக் காவலர் என்னைப் போலவே எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர். என்னைப் போலவே பிஎச்டி செய்ய விரும்பியவராகத்தான் இருந்தார். ஆனால் அவருக்கு ஜேஎன்யுவில் இடம் கிடைக்கவில்லை. அவரும் என்னைப்போலவே இந்நாட்டின் நிலைமையைப் புரிந்து கொண்டு, பிரச்சினைகளுக்கு எதிராகப் போராட விரும்பியவர்தான். எழுத்தறிவுக்கும் கல்விக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள விரும்பியவர்தான். இப்போது போலீஸ் காவலராக இருக்கிறார்.
இங்கேதான் ஜேஎன்யு முக்கியத்துவம் பெறுகிறது. அதனால்தான் ஜேஎன்யுவின் குரல்வளையை நெறிக்கப் பார்க்கிறீர்கள். பலவீனமானவர்கள் பிஎச்டி செய்துவிட முடியாது, ஏனென்றால், கல்வி வியாபாரமாக்கப்படுகிறது. அவரால் தனியாருக்கு லட்சக்கணகில் பணம் செலவு செய்ய முடியாது. அதனால் அவர் பிஎச்டி செய்ய முடியவில்லை.
அதனால்தான் நீங்கள் ஜேஎன்யுவை முடக்கப் பார்க்கிறீர்கள். ஒன்றுபட்டு எழும் குரலை முடக்கப் பார்க்கிறீர்கள். அது எல்லையில் நிற்பவனாக இருந்தாலும் சரி, வயல்வெளியில் தன் உயிரைக் கொடுத்து உழைப்பவனாக இருந்தாலும் சரி, அல்லது இந்த ஜேஎன்யூவில் சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பவனாக இருந்தாலும் சரி… அந்தக் குரல்கள் எழுந்துவிடக் கூடாது என்று நினைக்கிறீர்கள்.
நான் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் – பாபாசாகேப் சொன்னார். அரசியல் ஜனநாயகம் மட்டும் பயன் தராது, நாம் சமூக ஜனநாயகத்தை நிறுவுவோம். அதனால்தான் நாம் அரசமைப்பு குறித்து அடிக்கடி பேசுகிறோம். லெனின் சொல்கிறார் – சோஷலிசத்திலிருந்து ஜனநாயகத்தைப் பிரித்துப் பார்க்க முடியாது. அதனால்தான் நாம் ஜனநாயகம் குறித்துப் பேசுகிறோம். அதனால்தான் நாம் கருத்துரிமைச் சுதந்திரம் குறித்துப் பேசுகிறோம். அதனால்தான் சமத்துவம் பற்றிப் பேசுகிறோம். அதனால்தான் சோஷலிசம் குறித்துப் பேசுகிறோம். ஒரு கடைநிலை ஊழியனின் மகனும் குடியரசுத் தலைவரின் மகனும் ஒரே பள்ளியில் படிக்கும் காலத்தை உருவாக்க விரும்புகிறோம். ஆனால் நீங்களோ… இந்தக் குரலை ஒடுக்கப் பார்க்கிறீர்கள்.
ஆனால் அறிவியலில் ஒரு விஷயம் உண்டு. நீங்கள் எந்த அளவுக்கு அடக்கி வைக்கிறீர்களோ அந்த அளவுக்கு அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் இவர்களுக்கு விஞ்ஞானம் என்றால் ஆகவே ஆகாது. ஏனென்றால், விஞ்ஞானத்தைப் படிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். விஞ்ஞானி ஆவது முற்றிலும் வேறு விஷயம். தம்மை விஞ்ஞானிகளாக நினைத்துக் கொள்கிறவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன் – நாங்கள் கோருகிற விடுதலை ஏழ்மை மற்றும் பட்டினியிலிருந்து விடுதலை. அநீதி மற்றும் அக்கிரமங்களிலிருந்து விடுதலை. தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கான விடுதலை. அதை நாம் பெற்றே தீருவோம். அந்த விடுதலையையும் இதே அரசமைப்பின் மூலம், இதே நாடாளுமன்றத்தின் மூலம், இதே நீதியமைப்பின் மூலம் பெறுவோம். இது எங்கள் லட்சியம். இந்த நாட்டில் நாம் எந்த சுதந்திரத்தைப் பற்றிப் பேசினாலும், அதை இந்நாட்டின் சட்டங்கள் மற்றும் நீதியமைப்பின் வரம்புக்குள்ளேயே அடைவோம். இதுதான் அம்பேத்கரின் கனவு. இதுவேதான் ரோகித்தின் கனவு.
நீங்களே பாருங்களேன்… ஒரு ரோகித்தை அவர்கள் கொன்றார்கள். அதன் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை அவர்கள் ஒடுக்க முயற்சி செய்தார்கள். அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தார்களோ அந்த அளவுக்கு அது பெரிதாக வளர்ந்து விட்டது பாருங்கள்.
cc
இன்னும் ஒரு விஷயம். இப்போது ஜெயிலுக்குள் நடந்ததைப்பற்றிக் கூறப்போகிறேன். நாம் ஜேஎன்யுகாரர்கள். இது ஒரு வகையில் சுய விமர்சனம். உங்களுக்கும் எப்போதாவது சுயவிமர்சனம் உண்டு என்றால், அதை கவனத்தில் கொள்ளுங்கள். நாம் ஜேஎன்யுகாரர்கள் முக்கியமான விஷயங்களைப் பேசத்தான் செய்கிறோம். ஆனால் நாம் பயன்படுத்தும் சொற்கள் மிகவும கடினமானவை. இந்தியாவின் சாமானிய மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இது அவர்கள் குற்றமல்ல. அவர்கள் நேர்மையானவர்கள், எளிமையானவர்கள். அவர்களுடைய மட்டத்துக்கு இறங்கி அவர்கள் மொழியில் நாம பேச வேண்டும். உண்மையில் அவர்களுக்குப் போய்ச் சேர்வதுதான் என்ன? கிடைக்கிற எந்தத் தகவலையும் சீக்கிரம் ஃபார்வேர்ட் செய்யணும்… எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அதிகமான குரூப்புகளுக்கு விரைவாக அனுப்பிட வேண்டும்… ஆகவேதான் நண்பர்களே, அவர்களுடன் நாம் முறையான உறவை உருவாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.
சிறையில் எனக்கு இரண்டு கிண்ணங்கள் கிடைத்தன. ஒன்று நீல நிறம். மற்றொன்று சிவப்பு. இரண்டையும் பார்த்தபோது அடிக்கடி எனக்கு ஒரு சிந்தனை தோன்றியது… எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை கிடையாது. கடவுளையும் நான் அறிந்திலேன். ஆனால், இந்த நாட்டுக்கு நல்லது ஏதோ நடக்கப்போகிறது என்று எனக்குத் தோன்றியது. சிவப்பும் நீலமும் பக்கம் பக்கமாக இருக்கும்போது ஏதோ நடக்கும் எனத் தோன்றியது. அது எனக்கு இந்தியாவைப்போலத் தோன்றியது. நீலம் அம்பேத்கர் இயக்கத்தைப் போலவும், சிவப்பு (கம்யூனிச) இயக்கத்தைப் போலவும் தோன்றியது. நம் நாட்டில் இந்த இரண்டுக்குமிடையே ஒற்றுமையை மட்டும் நிலைநாட்டி விட்டால்…. நண்பர்களே எல்லாருக்கும் ஒரே சட்டமாய், எல்லாருக்குமான உலகம் ஒன்றாய், எல்லாருக்கும் நலம் தருவதாய்… எல்லாருக்கும் முன்னேற்றம் தரக்கூடிய “சப்கா சாத் சப்கா விகாஸ்” – எல்லாருக்கும் துணையாக, எல்லாருக்கும் முன்னேற்றம் தரக்கூடிய அரசை அமைத்தே தீருவோம். இது நம் கனவு காணும் கடமையாகும்.
உங்களுக்கெல்லாம் சுண்டல் காத்திருக்கிறது. ஒரு சொலவடை தெரியுமா…? ஜெயிலில் சுண்டல் எவ்வளவு காலம் இருக்கிறதோ அவ்வளவு காலம் வருவதும் போவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். (ஜப் தக் ஜெயில் மே சனா ரஹேகா தப் தக் ஆனா ஜானா லகா ரஹேகா) நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு ஜேஎன்யு மாணவன் சிறைக்குச் சென்றிருக்கிறான். ஒரு விஷயத்தை மறப்பதற்கு முன்னால் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இன்று மாண்புமிகு பிரதமர்… (மாண்புமிகுன்னு சொல்லியாகணும் இல்லியா… இல்லேன்னா இதையும் ஏதாவது திரித்து, அதுக்கும் ஒரு செடிஷன் வழக்குப் போட்டாலும் போட்டுடுவாய்ங்க…)
(தொடரும்)