சென்னை: ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்பட புகழ் நடிகர் ‘மாயி சுந்தர்’  மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், (டிசம்பர் 3ந்தேதி)  வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஹரி வைரவன் உடல்நலக் குறைவால் திடீரென உயிரிழந்தது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், வெண்ணிலா கபடி குழு படத்தில் நண்பர்களாக நடித்த மற்றொரு நடிகரான மாயி சுந்தர் இன்று அதிகாலை  உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டு உள்ளத.

மாயி சுந்தருக்கு தற்போது 50 வயதாகிறது.   இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

நடிகர் மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, குள்ள நரி கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி என 50 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

மாயி சுந்தர் மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாயி சுந்தர் உடலுக்கு இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் இன்று நடைபெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.