b
 
“மரியாதைக்குரிய முன்னாள் ஆர்எஸ்எஸ்காரர்களே… ஜேஎன்யு விஷயத்தை ப்ரைம் டைமில் நீங்கள் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். எதற்காக? மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று பிரதமர் வாக்களித்தார் என்பதை மறக்கடிப்பதற்காக. ஆனால் உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன் – ஜேன்யுவில் அட்மிஷன் கிடைப்பதும் கடினம், அதேபோல ஜேஎன்யுவினரை மறக்கச் செய்வதும் கடினம். மறக்கடித்து விடலாம் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், உங்களுக்கு மறந்து போயிருந்தாலும் நாங்கள் அவ்வப்போது அடிக்கடி உங்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருப்போம்.
இந்த நாட்டின் அரசு எப்போதெல்லாம் அநியாயம் செயகிறதோ, அப்போதெல்லாம் ஜேஎன்யு அதை எதிர்த்து எழுந்து நின்று குரல் கொடுத்திருக்கிறது, அதையேதான் இப்போதும் நாம் செய்கிறோம். எமது போராட்டத்தை நீங்கள் நீர்த்துப்போகச் செய்ய முடியாது.
எல்லையில் சாகும் வீரர்கள் குறித்துப் பேசுகிறார்கள். அந்த வீரர்களுக்கு என் வணக்கத்தை உரித்தாக்க விரும்புகிறேன். ஆனால் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. ஜெயிலில் நான் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேன். போராட்டம் கொள்கை சார்ந்தது என்றால், எதிராளி நபருக்கு தேவையற்ற விளம்பரத்தைத் தேடித்தந்து விடக்கூடாது. எனவே அந்தத் தலைவரின் பெயரைக் குறிப்பிட மாட்டேன். பாஜகவின் தலைவர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசினார் – இந்நாட்டின் இளைஞர்கள் எல்லையில் உயிர்த்தியாகம் செய்கிறார்கள். நான் அவரைக் கேட்கிறேன் – அவர்கள் உங்கள் புதல்வர்களா? உங்கள் சகோதரர்களா? தற்கொலை செய்து கொள்ளும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், நமக்கு உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பற்றி – எல்லையில் காவல் காக்கும் வீரர்களின் பெற்றோர்களாக இருந்து தம்மையே தியாகம் செய்யும் விவசாயிகள் பற்றி – நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
வயலில் உழும் வேலை செய்யும் விவசாயி என் தந்தை, எல்லையைக் காக்கும் வீரன் என் சகோதரன். எனவே, இந்த நாட்டில் எங்களிடையே விரோதத்தை உருவாக்க பொய்யான விவாதத்தைக் கிளப்ப முயற்சி செய்யாதீர்கள். இவர்கள் நாட்டின் உள்ளேயும் இறக்கிறார்கள், நாட்டின் எல்லையிலும் இறக்கிறார்கள். நீங்கள் நாடாளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள். நாட்டில் உயிரிழப்பவர்களுக்கு யார் பொறுப்பு? உயிரிழப்பவர்கள் அதற்குக் காரணமாக முடியாது. சண்டை மூட்டிவிடப் பார்க்கிறார்களே, அவர்கள்தான் பொறுப்பாவார்கள்.
எனக்கு ஒரு கவிதை நினைவு வருகிறது
ஒருவருக்கு அதிகம் என்றும்
ஒருவருக்கு குறைவு என்றும்
பிரிவினைகள் பேதங்களின்றி
எல்லாருக்கும் எல்லாம் என்று
எட்டும் நாள் வரும் வரையில்
அமைதி இல்லை அமைதி இல்லை.
ஆகவே நண்பர்களே, உயிரிழப்புகளுக்குப் பொறுப்பு யார் என்று யோசியுங்கள். யார் மக்களுக்கிடையில் சண்டை மூட்டுகிறார்கள் என்று சிந்தியுங்கள். நாட்டில் செத்துக் கொண்டிருப்பவர் என் தந்தை,எல்லையில் சாகிறவன் என் சகோதரன்.
தொலைக்காட்சிகளில் ப்ரைம் டைமில் பேசும் பேச்சாளர்களைக் கேட்கிறேன் – நாட்டில் இருக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை கேட்பது குற்றமா? யாரிடமிருந்து விடுதலை வேண்டும் என்று கேட்கிறார்கள் அவர்கள். ஏன், நீங்களே சொல்லுங்களேன்….– இந்தியாவில் யாராவது அடிமைகள் இருக்கிறார்களா என்ன? இல்லை. ஆக, நாம் இந்தியாவிடமிருந்து விடுதலை கேட்கவில்லை. இந்தியாவிடமிருந்து விடுதலை அல்ல நண்பர்களே, இந்தியாவுக்குள் விடுதலை வேண்டும் என்கிறோம். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. நாம் வெள்ளையரிடமிருந்து விடுதலை கேட்கவில்லை. நம் முன்னோர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தைக் கேட்கிறோம்.
bb
இனி நான் ஜெயில் அனுபவத்துக்கு வருகிறேன்.
காவலர்கள் என்னிடம் கேட்டார்கள். ஏதோ லால் சலாம் லால் சலாம் (செவ்வணக்கம்) என்றீர்களே… அது என்ன…? இது வழக்கு விசாரணையின்போது நடந்தது அல்ல. போலீஸ்காரர்கள் அவ்வப்போது சாப்பிடவோ, மருத்துவப் பரிசோதனைக்கோ அழைத்துச் செல்வார்கள். நானோ ஜேஎன்யுக்காரன். அதுவும் பிரம்மபுத்திராக்காரன். (பிரம்மபுத்திரா என்பது ஜேஎன்யு ஹாஸ்டல் கட்டிடங்களில் ஒன்று. ஒவ்வொரு ஹாஸ்டல் கட்டிடத்துக்கும் நதியின் பெயர்கள்தான் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களில் பிஎச்டி இறுதி ஆண்டில் இருக்கிற, சீனியர் மாணவர்களுக்கு மட்டும்தான் பிரம்மபுத்திரா ஹாஸ்டல் தரப்படும். அதாவது,பிரம்மபுத்திரா ஹாஸ்டல்காரன் அரசியல் முதிர்ச்சி உடையவர்கள் என்பது மறைபொருள்) என்னால் பேசாமல் இருக்க முடியுமா? உரையாடத் துவங்கினேன்.
உரையாடலின் போக்கில்தான் தெரிந்தது – அந்தப் போலீஸ்காரரும் என்னைப் போன்றவர்தான் என்பது. இங்கே போலீஸ் வேலைக்குச் செல்கிறவர்கள் யார்? விவசாயியின் மகன், கூலிக்காரன் மகன்,தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனின் மகன் இவர்கள்தான் போலீஸ் வேலை செய்கிறார்கள். நானும் இந்நாட்டின் பிற்பட்ட ஒரு மாநிலத்திலிருந்து வருகிறேன். நானும் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவன். நானும் விவசாயக்  குடும்பத்தைச் சேர்ந்தவன். போலீசில் இருப்பவர்களும் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான். நான் இங்கே பேசுவது, கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் மட்டத்தில் உள்ளவர்கள் பற்றித்தான். ஐபிஎஸ் ஆட்களுடன் எனக்கு அதிக இன்டராக்சன் ஏதும் கிடையாது. ஆக,கான்ஸ்டபிளுடன் உரையாடினேன். நான்இப்போது கூறப்போவதெல்லாம் அந்த உரையாடலின் பகுதிதான்.
லால் சலாம் லால் சலாம் என்கிறீர்களே… அது என்ன?
நான் சொன்னேன் – லால் என்றால் கிராந்தி – புரட்சி. சலாம் என்றால், புரட்சிக்கு வணக்கம்.
புரியவில்லையே என்றார் அவர்.
இன்குலாப் தெரியுமா என்று கேட்டேன்.
தெரியும் என்றார்.
கிராந்தி என்பதற்கு உருதுவில் இன்குலாப் என்கிறோம் என்று கூறினேன்.
அட… இந்த கோஷத்தை ஏபிவிபிகாரர்களும்தான் எழுப்புவது உண்டே என்றார்.
இப்போது புரிந்ததா – அவர்கள் போலிப் புரட்சிக்காரர்கள், நாங்கள் உண்மைப் புரட்சிக்காரர்கள் என்று சொன்னேன்.
அப்புறம் அவர் கேட்டார் – உங்கள் ஆட்களுக்கு ஜேஎன்யுவில் எல்லாம் மிகவும் மலிவாகக் கிடைக்கிறதே?
நான் கேட்டேன் – உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா…? உங்களுக்கு ஏன் இப்படிக் கிடைக்கவில்லை?உங்களுடைய இப்போதைய நிலை… அவர் நாளுக்கு 18 மணி நேரம் டியூட்டி செய்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன். உங்களுக்கு ஓவர்டைம் கிடைக்கிறதா?
இல்லை என்றார். பின்னே எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டேன்.
அது… அதுதான்… நீங்கள் கரப்ஷன் என்று சொல்கிறீர்களே அங்கிருந்துதான் என்றார்.
நல்லது. யூனிபார்முக்கு எவ்வளவு கிடைக்கிறது என்று கேட்டேன்.
நூற்றுப் பத்து ரூபாய் கிடைக்கிறது என்றார்.
நூற்றுப் பத்து ரூபாயில் என்ன கிடைக்கும். நான் சொன்னேன், இதிலிருந்துதான் நாங்கள் விடுதலை கேட்கிறோம் என்று. சிபாரிசுகளிலிருந்து, ஊழலிலிருந்து விடுதலை கேட்கிறோம்.
இதற்கிடையில் ஹரியாணாவில் ஒரு போராட்டம் துவங்கி விட்டது. தில்லி போலீஸ் துறையில் பெரும்பாலானவர்கள் ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள்தான் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் மிகவும் கடுமையான உழைப்பாளிகள், அவர்களுக்கு என் வணக்கம்.
(தொடரும்.)