சென்னை: முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1500 பணம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை தமிழர்கள் சிறப்புடன் கொண்டாட தமிழகஅரசு பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் ரேசன் கடைகளில் அரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்டது. பணம் வழங்கப்படவில்லை அப்போது ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், . இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரையுடன் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி, டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பொங்கலுக்கு பொதுமக்களுக்கு பணமாக கொடுக்கும் பட்சத்தில் ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கு மூலம் வழங்கினால் எளிதாக இருக்கும் என்று நிதித்துறை தெரிவித்த கருத்து முன் வைக்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே அதிமுக ஆட்சியில் வழங்கியதை விட கூடுதலாக வழங்க வேண்டும் என்றும், ரூ.1500 வழங்கலாம் என கூறியதாகவும் தெரிகிறது.
ஆனால், பரிசு பணத்தை வங்கிகளில் செலுத்துவதால், பொதுமக்கள் எளிதில் பெற முடியாமா என்பது குறித்து, ரூ.2 கோடியே 23 லட்சம் ரேஷன் கார்டுகளில் இன்னும் சில ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லாதது மட்டுமின்றி ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்கும் தகவலும் தெரிவிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, ரொக்கப் பணத்தை ரேசன் கடை மூலம் பொதுமக்களுக்கு கையில் கொடுத்தால், அதை வாங்கும் மக்களின் மகிழ்ச்சியும், வாழ்த்தும் சிறந்தது என சில அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அதுபோல, அரிசி, சர்க்கரை, ஆவின் நெய் ஆகிய மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 1,500 ரூபாய் ரொக்கப் பணத்தை சேர்த்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.
இருப்பினும், 1,000 ரூபாய் ரொக்கப் பரிசுத் தொகை வழங்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தரப்பினர் தகவல் தெரிவிக்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழக அரசிடம் இருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ரேசன் அட்டை தாரர்களுக்கு ரூ.2500 வழங்கிய நிலையில், அப்போது, பொங்கல் பரிசாக ரூ.5ஆயிரம் வழங்கவேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். அதனால், இந்த ஆண்டு திமுக கடந்த ஆண்டைகூட கூடுதலாக வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.